“பாதுகாப்பு கடுமையாக மீறப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதை அரசாங்கம் அரசியலாக்க வேண்டுமா ?”
அன்வார்: லஹாட் டத்துவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை
சின்ன அரக்கன்: சபாவில் ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்கள் நமது இராணுவ, போலீஸ் வீரர்களை கொன்றுள்ள வேளையில் அந்த ஊடுருவலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் ஆதரவு அளிப்பதாகக் கூறி பிரச்னைக்கு அரசியல் சாயம் பூசியதின் மூலம் அரசாங்கம் தன்னையே கேலிப் பொருளாக்கிக் கொண்டுள்ளது.
முக்கிய நாளேடுகள் வழக்கம் போல வெட்கமில்லாமல் அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டு செய்திகளைப் போடுகின்றன. அந்த முழு விவகாரமும் அம்னோவின் ‘சண்டிவாரா’ (நாடகம்) என பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா சொல்வதில் என்ன தவறு ?
நிச்சயம் யாரும் அப்படித் தான் நினைப்பார்கள். அந்த விவகாரத்தை இழுத்துக் கொண்டே போனது அம்னோ வழி நடத்தும் அரசாங்கமாகும். ஊடுருவல்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதனிடம் உறுதியும் இல்லை. இப்போது பலர் உயிரிழந்ததுள்ளதால் அந்த விவகாரத்தையே அரசாங்கம் குழப்பி விட்டது.
சபாவில் அம்னோ தொடங்கிய அடையாளக் கார்டு திட்டம் அந்த மாநிலத்துக்குள் கீழறுப்புச் சக்திகள் உட்பட சட்ட விரோதக் குடியேற்றக்காரர்கள் சுதந்திரமாக நுழைய வழி வகுத்து விட்டது.
அந்த ஊடுருவல்காரர்களில் பெரும்பாலோர் மலேசிய அடையாளக் கார்டுகளை வைத்திருக்க வேண்டும். ஊடுருவலை மேற்கொள்ளும் முன்னர் தங்கள் ‘வீட்டு வேலைகளை’ செய்ய அவர்கள் சபாவுக்கு பல முறை வந்து போயிருக்க வேண்டும்.
பாதுகாப்பு கடுமையாக மீறப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதை அரசாங்கம் அரசியலாக்க வேண்டுமா ?
ரெஸோம்: இந்த நாட்டைப் பாதுகாப்பதற்கு எனது சக மலேசியர்கள் உயிரிழந்திருப்பது தான் இங்கு முக்கியமான விஷயம். இனிமேல் யாரும் மரணமடையக் கூடாது.
குரல்: இந்த நாடு, மக்கள் ஆகியவற்றின் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்க வேண்டியது கூட்டரசு அரசாங்கமாகும்.
மலேசியாவின் தற்காப்பு, இராணுவம், போலீஸ், சுங்கத் துறை, கடலோரக் காவலர்கள், நாட்டின் பாதுகாப்புப் படைகளின் அனைத்து அங்கங்களுக்கும் அது தானே பொறுப்பு.
நமது நில, கடல் எல்லைகள் நல்ல முறையில் காவல் காக்கப்படுவதை உறுதி செய்வது கூட்டரசு அரசாங்கத்தின் கடமையாகும். நாட்டுக்குள் குறிப்பாக தென் பிலிப்பின்ஸுக்கு அருகிலும் கடற்கொள்ளையர்கள் நிறைந்துள்ள கடல் பாதைகளுக்கு அருகிலும் உள்ள சபாவில் யாரும் ஊடுருவாமல் அது பார்த்துக் கொள்ள வேண்டும்.
அந்தக் குழப்பத்துக்கு மற்ற தலைவர்கள் மீது அல்லது எதிர்க்கட்சிகள் மீது நடப்பு கூட்டரசு அரசாங்கத் தலைவர்கள் பழி போடுவது அவர்களுடைய பொறுப்பற்ற போக்கையே காட்டுகின்றது.
மஹாஷித்லா: அமெரிக்காவில் அன்வார் எதிர்ப்பு பிரச்சாரத்தை நடத்துவதற்கு பிஎன் அரசாங்கம் 1.2 மில்லியன் ரிங்கிட் செலவு செய்ய முடியும் என்றால் அபத்தமான அந்த செய்தியைப் போடுவதற்கு மணிலா டைம்ஸ் பத்திரிக்கையும் ராய்ட்டர் செய்தி நிறுவனத்தையும் அது ‘விலைக்கு’ வாங்குவது பெரிய விஷயமல்ல.
எதிர்க்கட்சிகள் அடுத்த அரசாங்கத்தை அமைக்குமானால் ஆயுதமேந்திய ஊடுருவலுக்கும் சபாவுக்கு சுயாட்சி உரிமையை வழங்கும் எனச் சொல்வதை நம்ப முடியவில்லை. சுயாட்சியை பெறுவதற்கு எதிர்க்கட்சிகளை ஆதரிக்குமாறு அடையாளக் கார்டு திட்ட திடீர் குடி மக்களை எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொள்ளும் எனச் சொல்ல முடியுமா ?
எந்த வழியில் பார்த்தாலும் அன்வார் தலைமையிலான எதிர்த்தரப்பு சபாவை சுலு சுல்தானிடம் அல்லது பிலிப்பின்ஸிடம் விற்று விடும் எனச் சொல்வதில் அர்த்தமே இல்லை. உண்மையில் அது மோசமாக ஜோடிக்கப்பட்ட கதையாகும். அந்தத் தகவலுக்கான ஆதாரத்தைப் பிலிப்பின்ஸ் அரசாங்கம் விசாரிப்பது நல்லது.
உங்கள் அடிச்சுவட்டில்: அதில் அன்வார் சம்பந்தப்பட்டுள்ளாரா இல்லையா என்பது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா பொறுப்பற்ற அறிக்கையை வெளியிட்டாரா எனது குறித்து எங்களுக்குக் கவலை இல்லை.
சபாவில் இப்போது எழுந்துள்ள பிரச்னையையே நாம் கவனிக்க வேண்டும். கிளர்ச்சி மூளுவதற்கு தோதான சூழ்நிலையை உருவாக்கியது யார் ? நமது மண்ணில் அந்த அந்நியத் துப்பாக்கிக்காரர்களும் சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களுக்கு இவ்வளவு துணிச்சல் எப்படி வந்தது ?
கொல்லப்பட்ட நமது போலீஸ் அதிகாரிகளுக்கு என அனுதாபங்கள். பல ஆண்டுகளாக முஸ்லிம் சகோதரத்துவ உணர்வுகள் ஊட்டப்பட்டதால் அவர்கள் தங்கள் விழிப்பு நிலையைக் குறைத்திருக்க வேண்டும்.