சபா இழுபறி தொடர்பில் நாடாளுமன்றம் கூட வேண்டும் என பக்காத்தான் அறைகூவல்

anwarஅண்மையில் கிழக்கு சபாவில் நிகழ்ந்துள்ள பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சம்பவங்கள் பற்றி விவாதிப்பதற்காக சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என பக்காத்தான் ராக்யாட் தலைவர்கள் அறைகூவல் விடுப்பதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

அத்துடன் பக்காத்தான் ராக்யாட்டுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் “அந்த விவகாரம் மீது புரிந்துணர்வு ஏற்படுவதற்கு” வட்டமேசை விவாதம் நிகழ வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

“தேசியப் பாதுகாப்பு என்பது அரசியல் வேறுபாடுகளைக் கடந்தது என நாங்கள் நம்புகிறோம். பாதுகாப்புப் படைகளுடைய முயற்சிகளுக்கு அனைத்து குடிமக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என நாங்கள்  கருதுகிறோம். என்றாலும் அந்த முழு விவகாரத்திலும் கூட்டரசு தலைமைத்துவம் போதுமான அளவுக்கு உறுதியாக செயல்படவில்லை என்ற பொறுப்பிலிருந்து அது நழுவ முடியாது,” என பிகேஆர் மூத்த தலைவர் சொன்னார்.anwar1

அவர் இன்று பிகேஆர் தலைமையகத்தில் டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங், பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி ஆகியோருடன் இணைந்து கூட்டாக நடத்திய நிருபர்கள் சந்திப்பில் பேசினார்.

பாதுகாப்புப் படைகளுடைய ஆற்றலில் நம்பிக்கை தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசாங்கம் மலேசியாவின் இறையாண்மை மீறப்பட்டுள்ளதை சமாளிப்பதற்கு தெளிவான திட்டத்தை வழங்கத் தவறி விட்டது என்றும் துல்லிதமான தகவல்களை விரைவாகத் தெரிவிக்கத் தவறி விட்டது என்றும் குறை கூறினர். அதன் விளைவாக வதந்திகள் பரவத் தொடங்கி விட்டன.