சபா இழுபறியில் தலையிட்டு கோலாலம்பூருக்கும் சுலு சுல்தானுக்கும் இடையில் பேச்சுக்கள் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு மொரோ தேசிய விடுதலை முன்னணி (MNLF), ஒஐசி என்ற இஸ்லாமிய மாநாட்டு நிறுவனத்தையும் ஐநாவையும் கேட்டுக் கொண்டுள்ளது.
அந்த பேச்சுக்களில் மணிலா சேர்க்கப்படக் கூடாது என்றும் MNLF கூறியது. அந்தத் தகவலை இன்று பிலிப்பின்ஸ் ஸ்டார் வெளியிட்டுள்ளது.
தமது இனம், சபா, சரவாக் ஆகிய பிரதேசங்களின் உண்மையான உரிமையாளர் என வலியுறுத்திய அந்த அமைப்பின் தலைவர் நூர் மிசுவாரி, சபாவுக்கு மேலும் துருப்புக்களை அனுப்புவதை நிறுத்திக் கொள்ளுமாறும் “உங்கள் குரலைத் தணித்துக் கொள்ளுமாறும்” மலேசியப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை கேட்டுக் கொண்டார்.
மலேசியப் படைகளுக்கும் சுலு சுல்தானுடைய ஆயுதப் பிரிவுக்கும் இடையில் நடுவராக தமது அமைப்பு செயல்பட முடியும் என MNLF இஸ்லாமியத் தளபத்திய மன்றத் தலைவர் ஹபிபி முஜாஹாப் ஹஷிம் பிலிப்பின்ஸ் ஸ்டார் பத்திரிக்கையிடம் தெரிவித்தார்.
ஒஐசி சார்பில் அதன் உறுப்பினர்களான புருணையும் இந்தோனிசியாவும் நடுவர் பணியில் கலந்து கொள்ளலாம் என்றும் அவர் சொன்னார்.
சபாவில் பிலிப்பினோக்களுக்கு எதிராக மலேசியப் படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை நேரில் காண்பதற்கு ஐநா தனது மனித உரிமைகள் குழு, செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் வழி பேராளர்களை அனுப்ப வேண்டும் என்றும் ஹபிப் வலியுறுத்தினார்.
சனிக்கிழமை இரவு டாவோ சிட்டியைச் சென்றடைந்த மிசுவாரி, சபாவில் உள்ள பிலிப்பினோ சிவிலியன்களை ஒடுக்க வேண்டாம் என்றும் நஜிப்பை கேட்டுக் கொண்டார். அவ்வாறு செய்தால் வன்முறைகள் அதிகரிக்கும் என அவர் எச்சரித்தார்.
தமது சொந்தக்காரரர் ஒருவர் நஜிப்ப்புக்கு உறவினர் என்றும் மிசுவாரி கூறிக் கொண்டார். சபா பூசல் ‘சகோதரத்துவ அடிப்படையில் அனைவருடைய நலனுக்கும் ஏற்ற வகையில்’ தீர்க்கப்பட வேண்டும்’, என்றும் அவர் வலியுறுத்தினார்.
மிசுவாரி: ஊடுருவலை நான் தூண்டவில்லை
லஹாட் டத்துவுக்கு சென்றவர்களில் சிலர் தமக்கு உறவினர்கள் என்பதையும் தமது பிரிவைச் சார்ந்தவர்கள் என்பதையும் ஒப்புக் கொண்ட மிசுவாரி தாம் ஊடுருவலைத் தூண்டவில்லை எனத் திரும்பத் திரும்பக் கூறினார்.
“அது எப்படி முடியும் ? நான் என் மனைவியுடன் கடந்த ஒரு மாதத்திற்கு மேல் ஆப்பிரிக்காவில் இருந்தேன். சுல்தானுடைய நடவடிக்கைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை,” என்றார் அவர்.
‘200 பேரை மட்டும்’ அனுப்புவது ‘என் பாணியல்ல’ என அவர் குறிப்பிட்டார்.
பாங்சாமொரோ நிலம் அல்லது மிண்டானோ நாட்டுக்கு சுதந்திரத்தை பெறும் நோக்கத்துடன் பிலிப்பின்ஸ் அரசாங்கத்துக்கு எதிராகப் போராடுவதற்காக 1969ம் ஆண்டு மிசுவாரி மொரோ தேசிய விடுதலை முன்னணி (MNLF) என்ற அரசியல் அமைப்பை தோற்றுவித்தார்.
அந்த MNLF, தகராற்றுக்கு உட்பட்ட பிரதேசத்துக்கு பகுதி சுயாட்சி வழங்கப்படுவதை ஒப்புக் கொண்டு 1976ம் ஆண்டு பிலிப்பின்ஸ் அரசாங்கத்துடன் ஒர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
அந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து ஹஷிம் சலாமாட் தலைமையில் ஒரு குழு MNLF அமைப்பிலிருந்து பிரிந்து சென்று மொரோ இஸ்லாமிய விடுதலை முன்னணி (MILF)என்ற அமைப்பைத் தோற்றுவித்தது.
கடந்த பாங்சாமொரோ மீது ஒர் ஒப்பந்த வடிவத்தில் மணிலாவும் MILFம் கடந்த அக்டோபர் மாதம் கையெழுத்திட்டன. மிண்டானோவில் பல ஆண்டுகளாக பிலிப்பின்ஸ் படைகளுக்கும் இஸ்லாமிய பிரிவினைவாத அமைப்புக்களுக்கும் இடையில் தொடரும் பூசலை முடிவுக்குக் கொண்டு வந்த அந்த ஒப்பந்தம் உருவாவதற்கு கோலாலம்பூர் நடுவர் பணியாற்றியது.
ஆனால் அந்த ஒப்பந்தத்தில் விடுபட்டுப் போன MNLF அதனை எதிர்த்ததுடன் சபாவுக்குள் சுலு சுல்தான் ஆட்கள் ஊடுருவுவதற்கும் வெளிப்படையாக ஆதரவு அளித்தது. ஆகவே அந்த அமைதி முயற்சியை சீர்குலைப்பதே சபா ஊடுருவலுக்குப் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கம் என சந்தேகிக்கப்படுகின்றது.
சுலு ஆதரவாளர்கள் கடந்த சனிக்கிழமையன்று இரவு செம்போர்ணாவில் போலீஸ் நிலையம் ஒன்றைத் தாக்கி அங்கு ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பிலிப்பினோ முஸ்லிம்களை விடுவித்ததாக ஹபிப், பிலிப்பின்ஸ் Inquirer பத்திரிக்கையிடம் கூறினார்.
தவாவ் நகரில் மலேசிய இராணுவ வாகனம் ஒன்றின் மீது சுலு ஆதரவாளர்கள் மறைவுத் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் கூறிக் கொண்டார்.
ஆனால் மலேசியப் போலீசார் அந்த கூற்றுக்களை உறுதி செய்யவில்லை.
இதனிடையே சபாவுக்குள் ஊடுருவ சுலு ஆயுதக் கும்பல் நான்கு மாதங்களுக்கு முன்னரே திட்டமிடத் தொடங்கி விட்டதாக பிலிப்பின்ஸ் அதிகாரிகளை மேற்கோள் காட்டி மலேசியாவின் சன் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
“சுலு சுல்தான் ஜமாலுல் கிராம், தமது ஆதரவாளர்களுடனும் MNLF உறுப்பினர்களுடனும் அபு சாயாப் உறுப்பினர்களுடனும் கடந்த அக்டோபர் மாதம் சந்திப்பு நடத்தினார். அந்த மாநிலத்தைப் பிடிப்பதற்குச் சண்டையிட்டால் அவர்களுக்கு அங்கு நிலம் வழங்கவும் அவர் முன் வந்தார்.”