நாளை தொடங்கவிருந்த சபா குடியேற்றக்காரர்கள் மீதான ஆர்சிஐ என்ற அரச ஆணைய விசாரணை லஹாட் டத்து நிலவரம் காரணமாக மார்ச் 18ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஆர்சிஐ நடவடிக்கைகள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ள தகவலை அந்த விசாரணைய நடத்தும் அதிகாரியான டிபிபி மனோஜ் குருப் தொடர்பு கொள்ளப்பட்ட போது உறுதிப்படுத்தினார்.
“ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ள மார்ச் 18, மார்ச் 21 தேதிகளில் ஆர்சிஐ மீண்டும் கூடும்,” என அவர் சொன்னார்.
ஆர்சிஐ முன்பு நாளை சாட்சியமளிக்கவிருந்த சபாவை தளமாக கொண்ட அறுவைச் சிகிச்சை மருத்துவர் டாக்டர் சொங் எங் லியோங்-கும் அந்தத் தகவலை உறுதி செய்தார்.
1999ம் ஆண்டு லிக்காஸ் சட்டமன்றத் தொகுதி மீது சொங்-கும் மற்றும் பலரும் தேர்தல் மனுவைச் சமர்பித்தனர். அந்த மனுவைத் தொடர்ந்து அந்தத் தொகுதி தேர்தல் முடிவுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
அவர் சபாவில் அந்நியர்களுக்கு நீல நிற அடையாளக் கார்டுகள் வழங்கப்பட்ட ‘அடையாளக் கார்டு திட்டம்’ தொடர்பில் ‘நாம் மறந்து விடுவோம்’ என்னும் தலைப்பில் ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
முன்னாள் சபா, சரவாக் தலைமை நீதிபதி ஸ்டீவ் ஷிம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆர்சிஐ-யில் ஐவர் உறுப்பினர்களாக உள்ளனர்.
நீல நிற அடையாளக் கார்டுகள் கொடுக்கப்பட்ட அந்நியர்கள் எண்ணிக்கை, அவை சட்டத்துக்கு இணங்க கொடுக்கப்பட்டதா, அதில் சம்பந்தப்பட்டவர்கள் சபா வாக்காளர் பட்டியலில் உள்ளனரா என்பதைக் கண்டு பிடிப்பது போன்ற எட்டு வகையான பொறுப்புக்கள் ஆர்சிஐ-க்குக் கொடுக்கப்பட்டுள்ளன.
சபா மக்கள் தொகை திடீரென அதிகரித்தது பற்றியும் அதனால் அந்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ள சமூக விளைவுகள் பற்றியும் நாடற்ற அந்நியர்கள் எண்ணிக்கை பற்றியும் அது புலனாய்வு செய்யும்.
இது வரையில் 64 பேர் சாட்சியமளித்துள்ளனர். கடைசி விசாரணை பிப்ரவரி 23ம் தேதி நடைபெற்றது.