பாதுகாப்புப் படைகள் நடமாட்டம் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டாம் என வேண்டுகோள்

anwarசபா, செம்போர்ணாவிலும் லஹாட் டத்துவிலும் ஆயுதமேந்திய பிலிப்பினோ படையெடுப்பாளர்களுடைய ஊடுருவலை முறியடிக்க அதிகாரிகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு வலைப்பதிவாளர்கள் உட்பட எல்லாத் தரப்புக்களும் ஆதரவளிக்க வேண்டும். அத்துடன் பாதுகாப்புப் படைகளுடைய நடமாட்டம் குறித்த ரகசியத் தகவல்களையும் வெளியிடக் கூடாது.

இவ்வாறு போஸ்னியா ஹெர்ஸகோவினாவில் பணியாற்றியுள்ள மேஜர் (ஒய்வு பெற்ற) வான் ஹஷிம் வான் அகமட் கேட்டுக் கொண்டுள்ளார்.  நெருக்கடியைத் தணிப்பதற்குப் பாதுகாப்புப் படைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றியும் பொது மக்கள் கேள்வி எழுப்பக் கூடாது என்றார் அவர்.

“வலைப்பதிவாளர்கள் பாதகமான கருத்துக்களை வெளியிடக் கூடாது. அது மக்களை பிளவுபடுத்தி விடும். அந்த நிலை நமது தார்மீக வலிமையை தகர்த்து விட்டதாகக் கருதப்படும்,” என அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

“பாதுகாப்புப் படைகளுடைய நடமாட்டம் பற்றிய படங்களையும் அண்மைய தகவல்களையும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியிடவும் கூடாது. கடமையில் உள்ள அதிகாரிகளுடைய தொலைபேசி எண்களையும் வெளியிடக் கூடாது. அது தவறாகப் பயன்படுத்தப்படலாம்.”

இதனிடையே பாதுகாப்புப் படைகள் மிகவும் எச்சரிக்கையுடன் இயங்குவதால் நெருக்கடியைத் தீர்ப்பதில் யார் கை ஒங்கியிருக்க வேண்டும் என்ற கேள்விகளை எழுப்பாமல் மக்கள் போலீசுக்கும் ஆயுதப்படைகளுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று Komando Kedai Kopi  அல்லது மேஜர் (ஒய்வு பெற்ற) நாஸா தாலிப்-பும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தானியங்கி ஆயுதங்களை வைத்துள்ள, பிலிப்பின்ஸ் காடுகளில் தலைமறைவுப் போரில் அனுபவம் பெற்றுள்ள  ஊடுருவல்காரர்களை போலீஸ் வீரர்கள் துணிச்சலுடன் எதிர்கொள்வதாக அவர் பாராட்டினார்.

-பெர்னாமா