“டி. மோகன் என் மீது வழக்கு தொடுக்கலாம்”, அழைக்கிறார் சேவியர்

XavierJayakumarமஇகாவின் டி. மோகன் மக்களின் நலனுக்குப் போராடுவது உண்மையானால் அவர் தமக்கு எதிராக வழக்கு தொடுக்கலாம் என்று அழைப்பு விடுத்தார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

கடந்த 15 ஆண்டுகளாக கிள்ளான் புக்கிட் ராஜா தோட்டப் பாட்டாளிகளின் பிரச்னைக்கு, ஒழுங்கான தீர்வுக்கான இயலாதவர்கள், இன்று பக்காத்தான் அரசு நிர்ப்பந்தத்தில் சைம்டார்பி நிறுவனம் தொழிலாளர்களுக்கு அருமையான வீடுகளைக் கட்டுவதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்றாரவர்.

“மாநில அரசு நிலத்தைக் கையாடி விட்டதாகக் குற்றம் சாட்ட டி. மோகனுக்கு துணிவிருந்தால், அவர் ஏன் தகுந்த ஆதாரத்துடன் ஊழல் ஒழிப்பு இலாக்காவிடம் புகார் செய்யக்கூடாது? குறைந்தது என் மீது வழக்கு தொடுத்தாவது தோட்ட மக்களுக்கு, இழப்பீட்டை வாங்கித் தரலாமே, அதை விடுத்து அடுத்தவர் பின்னால் ஒழிந்து கொண்டு  அறிக்கை விடுவதும், அப்பாவி மக்களைத் துணைக்கு அழைத்து நாடகம் ஆடுவதும் அவசியமில்லை”, என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

நேற்று  சிலாங்கூர் மாநில செயலகத்தின் முன் டி. மோகன்  ம.இ.காவின் இளைஞர் பகுதிக்குத் தலைமை ஏற்று மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் குறித்து தன்னிடம் கேள்வி எழுப்பிய பத்திரிக்கைகளுக்கு, அவர் கீழ் கண்டவாறு பதிலளித்தார்:

“சிலாங்கூர் மாநிலத்தில் பக்காத்தான் ராயாட் ஆட்சியமைத்த பின் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர்  சிவராசாவின் டயிம் காமணி சட்ட அலுவலகத்தின் வழி புக்கிட் ராஜா தோட்ட நிர்வாகத்தின் மீது வழக்கு தொடுத்த  தொழிலாளர்களின் பட்டியல் எங்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் படி அந்த 75 தொழிலாளர்களின் பட்டியல் உறுதி செய்யப்பட்டு  அவர்களுக்கான நடத்தர விலை வீடுகளும் கட்டுமானத்தில் இருக்கிறது.

mohan_mic“தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த வீட்டுத் திட்டத்தில் ஆலயம், பொது மண்டபம், விளையாட்டுத் திடல் ஆகியவைக்கும் நிலம் ஒதுக்கப் பட்டுள்ளது.  இந்தத் தரை வீடுகள் ஒவ்வொன்றும்  20 x 70 அடி நிலப்பரப்பில் கட்டப்படும். அதற்கான இன்றைய சந்தை விலை 150 ஆயிரம் வெள்ளிக்கு மேல்  என்றாலும் 80 ஆயிரம் வெள்ளிக்குள் தொழிலாளர்களுக்கு விற்கப் பட வேண்டும் என்பதே  சைம்டார்பி மேம்பாட்டு துணை நிறுவனத்துடனான நமது ஒப்பந்தம்.

“இன்று இந்த வீட்டுக்குழுவுக்கு தலைவர் என்று கூறிக்கொண்டு அறிக்கை விடும்  மதியழகன் 13 ஏப்ரல் 2008ல் எனக்கு எழுதியுள்ள  கடிதத்தில் 76 தொழிலாளர்களைப் பற்றித்தான் எழுதியுள்ளார். அவரின் கடிதத்தில் 2008 ம் ஆண்டு  தேர்தலுக்கு முன் தொழிலாளர்களின் வீடமைப்பு மற்றும் நிலம்  குறித்து அறிக்கை விட்ட டத்தோ ஸ்ரீ சாமிவேல் உட்பட  பாரிசானின் மற்றவர்கள்  2008ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது பேசியது குறித்து எழுதியிருந்தார்.  பாரிசான் மற்றும் சாமிவேலுவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது  பாரிசானின் கடமை.

“அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது என்பதனைப் பல முறை சொல்லி விட்டோம். மேலும்  அந்த நிலம் குறித்துக் கடந்த ஆண்டு செப்டம்பர் 24ந்தேதி ஸ்டார் பத்திரிக்கையில்  வெளியான செய்திக்கு சைம் டார்பி நிறுவனம்  பதிலளித்திருந்தது. அதன்படி 1998 ம் ஆண்டு 427 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பிரச்சனைகள்  படிப்படியாகத் தீர்வுக்கான பட்டுவிட்டதாக அந்நிறுவனம் கருதுகிறது.

“பக்காத்தான் சிலாங்கூர் மாநில அரசு அந்நிறுவனத்தைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்த பொழுது எஞ்சியிருந்த தொழிலாளர்களுக்காக மட்டுமே பேச்சுவார்த்தைக்கு  அவர்கள்  இணங்கினர், அதாவது, டயிம் காமணி சட்ட அலுவலகத்தின் வழி வழக்கு தொடுத்த 75 தொழிலாளர்களின் பட்டியல் உறுதி செய்யப்பட்டு  அவர்களுக்காகவே வீடுகள் கட்டப் படுகிறது.

“சாமிவேலுவின் பேச்சுவார்த்தை குறித்தோ அல்லது அவர் ஏதேனும்  ஒப்பந்தம் செய்திருந்தால் அதுகுறித்து அவரிடம் கேட்க வேண்டும்.  அல்லது ம.இ.காவின் மனித வள அமைச்சர் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசு நிலத்தைக் கையாடி விட்டதாகக் குற்றம் சாட்டி டி.மோகன் துணிவிருந்தால் அவர் ஏன்  ஆதாரத்துடன் ஊழல்  ஒழிப்பு இலாக்காவிடம் புகார் செய்யக்கூடாது?

“அதை விடுத்து அடுத்தவர் பின்னால் குறிப்பாக  தோட்டப்பாட்டாளிகள் பின்னால் ஒழிந்து கொண்டு  அறிக்கை விடுவதும், அப்பாவி மக்களைத் துணைக்கு அழைத்து நாடகம் ஆடுவதும் ஓர் அரசியலா? சுரண்டுவதும், ஏமாற்றுவதும் யாருக்கு கைவந்த கலை என்பது நாடறிந்த ஒன்று. இது போன்ற அநாகரீக அரசியலுக்கு மக்கள் சீக்கிரம்  முடிவு கட்டுவார்கள்”, என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

TAGS: