செம்பூர்னாவில் ஒரு போலீஸ்காரரின் தலை துண்டிக்கப்பட்டதா?

IGPசனிக்கிழமை, செம்பூர்னா, கம்போங் ஸ்ரீ ஜெயா சிமுனுலில் ஆயுதம் தாங்கிய கும்பலுடன் நிகழ்ந்த மோதலில் ஒரு போலீஸ் அதிகாரியின் தலை துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுவதை போலீசார் மறுக்கவோ உறுதிப்படுத்தவோ இல்லை.

இன்று லாஹாட் டத்துவில் செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் இஸ்மாயில் ஒமார், தாம் இன்னமும் பிண ஆய்வு அறிக்கையைப் பார்க்கவில்லை என்றார்.

செய்தியாளர்: போலீஸ் அதிகாரி ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறதே, அது உண்மையா?

இஸ்மாயில்: எங்களுக்குத் தெரியாது.

செய்தியாளர்: நேற்றே பிண ஆய்வு அறிக்கையைப் பார்க்கப்போவதாக சொன்னீர்களே, அது உண்மையா?

இஸ்மாயில்: (சாபா போலீஸ் தலைவருடன் தனியே எதுவோ பேசுகிறார்) போலீசார் இன்னும் அந்த ஆய்வு அறிக்கையைப் பார்க்கவில்லை. நான் இன்னும் பார்க்கவில்லை.

ஊடுருவல்காரர்களிடம் சிக்கிய போலீஸ் அதிகாரி ஒருவர் தலை துண்டிக்கப்பட்டதாகவும் இன்னொருவர் கத்தியால் குத்தப்பட்ட பின்னர் தீயிட்டுக் கொளுத்தப்பட்டார் என்றும் இன்று உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டிருந்தது.

கடந்த சனிக்கிழமை, ஸ்ரீ ஜெயா சிமுனுல் கிராமத்தில் ஆயுதம் தாங்கிய கும்பல் நடமாடுவதாகக் கேள்விப்பட்டு அதை ஆராய்வதற்காகச் சென்ற போலீஸ் குழுவொன்றை ஊடுருவல்காரர்கள் பதுங்கியிருந்து தாக்கினார்கள்.

நேற்று அப்பகுதியில் போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கையில் ஆறு போலீசார் அதிகாரிகளின் உடலைக் கண்டெடுத்தனர். மேலும், ஆறு உடல்களும் காணப்பட்டன. அவை எதிரிகளின் உடல்கள் எனக் கருதப்படுகிறது.