இலங்கையில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு உதவ மலேசிய அரசாங்கம் வழங்கிய நிதி என்ன ஆனது? அந்த நிதி எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பது பற்றி கா. ஆறுமுகத்தை போலிஸ் விசாரிக்க வேண்டும் என்று முரளி சுப்பிரமணியம் போலிஸ் புகார் செய்திருந்தார்.
இது குறித்து வழக்கறிஞர் கா. ஆறுமுகம் இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-
“மலேசிய தமிழ்ப் பேரவைக்கு அரசாங்கம் வழங்கிய 10 இலட்சம் டாலர் (32 இலட்சம் வெள்ளி) சார்பாக என்மீது கடந்த மார்ச் 1-ஆம் தேதி போலிஸ் புகார் ஒன்று கிள்ளானில் செய்யப்பட்டது. புகார் செய்தவர்கள் அடுத்த கணமே அது சார்பாக பத்திரிக்கை நிருபர்களுக்குத் தகவல் கொடுத்து தாங்கள் செய்த புகாரின் நகலை விநியோகித்துள்ளனர்.
அந்த புகாரில் நான் 10 இலட்சம் டாலருக்கான (32 இலட்சம் வெள்ளி) காசோலையைப் பெற்றதாகவும், அதை நான் முறையாக பயன்படுத்தி உள்ளேனா அல்லது இல்லையா என்பதை போலிஸ் விசாரணை செய்ய வேண்டும் என்றும், ஒரு நிரந்தர வேலையற்ற என்னால் எப்படி அதிகமான சொத்துகளை சேர்க்க முடிந்தது என்பதையும் போலிஸ் விசாரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இந்த புகாரை போலிஸ் புலன் விசாரணை செய்வதில் எனக்குப் பிரச்சனை இல்லை. அதற்கு நான் தயாராக உள்ளேன்.
இது சார்பாக பத்திரிக்கை நிருபர்கள் தொலைபேசி வழி தொடர்பு கொண்ட போது, அவர்களிடம் அந்தத் தகவல்கள் உண்மையல்ல என்றும் அந்த நிதி என்னிடம் வழங்கப்படவில்லை, அது மலேசிய தமிழ்ப் பேரவை சார்புடையது என்றும் கூறினேன். நான் பங்கெடுத்த அந்நிகழ்வில் பெரிய அளவிலான மாதிரி காசோலைதான் (Mock-Cheque) வழங்கப்பட்டது என்றும், அதில் கூட எனது பெயர் இல்லை என்றும் அதற்கும் எனக்கும் தனிப்பட்ட வகையில் எந்த சம்பந்தம் இல்லை. ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்படும் நிதியை தனிப்பட்ட வகையிலே தனிநபர் ஒருவரால் கையாள இயலாது என்றும் கூறினேன்.
எனவே, இது சார்பாக தனிநபரான என் மீது பொய்யான போலிஸ் புகார் செய்து அதை பத்திரிகை செய்தியாக்கினால் அது தவறான கருத்தை மக்களிடையே பரப்பும் என்றேன். அப்படி செய்தி வெளியாகும் தறுவாயில் எனக்கு இருக்கும் வழிமுறை சட்ட நடவடிக்கை மட்டும. அதனால் பொய்யான செய்திகளை போடாதீர்கள் என்றேன். ஆனால், மார்ச் 2-ஆம் தேதியும் 3-ஆம் தேதியும் இது தொடர்பான செய்திகளை மலேசிய நண்பன் அதன் முதல் பக்க செய்திகளாக வெளியிட்டது. போலிஸ் புகாரில் விசாரணை செய்ய கோரியவர்கள் மறு நாளே நான் ஏன் அமைதி காக்கிறேன் என்கிறார்கள்.
“இந்தப் போலிஸ் புகாரும் செய்திகளும் என்னை பற்றி தவறான கருத்துகளை மக்கள் மத்தியிலே பரப்புகின்றன. எனவே, ஒரு தனி நபர் என்ற வகையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது அவதூறு வழக்குத் தொடர ஆலோசித்து வருகிறேன்” என அவ்வறிக்கையில் வழக்கறிஞர் கா. ஆறுமுகம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாளை (05.03.2013) நண்பகல் 3 மணிக்கு ஜாலான் ஈப்போவில் அமைந்துள்ள மெட்ராஸ் கபே உணவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பத்திரிக்கையாளர் கூட்டத்தில் இதுகுறித்த விளக்கங்களை தமிழ்ப் பேரவை மலேசியா அளிக்கவுள்ளது.