சபாவில் ஊடுருவியுள்ள ஆயுதமேந்திய நபர்களுடைய நடவடிக்கைகள் இஸ்லாமியப் போதனைகளுக்கு முரணானவை என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று கூறியிருக்கிறார்.
அவர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் ரத்தம் சிந்தப்பட்டுள்ளது. அவர்கள் செம்போர்ணாவிலும் லஹாட் டத்துவிலும் நிகழ்ந்த இரண்டு சம்பவங்களில் எட்டு போலீஸ் அதிகாரிகளைக் கொன்றுள்ளதாக அவர் சொன்னார்.
“நாங்கள் அந்த விவகாரத்தை ரத்தம் சிந்தப்படாமல் தீர்க்க முயன்றோம். ஆனால் சுலு மக்கள் வன்முறையாளர்கள் என்பதை அறிந்து கொண்டோம். அவர்கள் வீரர்களை மட்டும் கொல்லவில்லை. இறந்தவர்களையும் கூட அவர்கள் சிதைக்கின்றனர்.”
“அவர்கள் முஸ்லிம்களாக இருக்க வேண்டும். ஆனால் அவர்களுடைய நடவடிக்கைகள் இஸ்லாத்துக்கு முரணாக உள்ளன,” என அனைத்துலக முஸ்லிம் ஒற்றுமை, பொருளாதார மாநாட்டைத் தொடக்கி வைத்த பின்னர் நிருபர்களிடம் கூறினார்.
அந்த மாநாட்டை மலேசிய மலாய் வர்த்தக சங்கம் கோலாலம்பூரில் ஏற்பாடு செய்துள்ளது.
ஊடுருவல்காரர்களை அரசாங்கம் உடனடியாகத் தோற்கடித்து அவர்கள் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்றும் மகாதீர் கேட்டுக் கொண்டார்.
மார்ச் முதல் தேதியும் இரண்டாம் தேதியும் ஊடுருவல்காரர்களுடன் நிகழ்ந்த மோதல்களில் லஹாட் டத்துவிலும் செம்போர்ணாவிலும் எட்டு போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். அந்த இரண்டு சம்பவங்களிலும் ஊடுருவல்காரர்களில் 18 பேரும் கொல்லப்பட்டனர்.
ஊடுருவல்காரர்கள் துப்பாக்கிச் சண்டைகளில் தோல்வி கண்டாலும் நீண்ட காலத்துக்கு வன்முறையில் தொடர்ந்து ஈடுபடக்கூடும் எனத் தாம் கருதுவதால் நிலைமை மோசமடையும் என தாம் அஞ்சுவதாக மகாதீர் மேலும் சொன்னார்.