மலேசிய இந்தியர்களின் விடியலுக்காக வேதமூர்த்தி உண்ணாவிரத பிரார்த்தனை

waythamoorthy-Hindrafதொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு மறுக்கப்பட்டிருக்கும்    மலேசிய இந்தியர்களுக்கான நீதியையும், உரிமையையும் , தன்மானத்தையும் மீட்டு நிலை நிறுத்தும் நோக்கத்தில்   ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி உண்ணாவிரத பிரார்த்தனை  மேற்கொள்வார் என்று ஹிண்ட்ராப் தேசிய ஆலோசகர் நா. கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகிறார்.

ஹிண்ட்ராப் போராட்டத்தின் மிக முக்கிய திருப்பு முனையாக இது அமையும். 50 ஆண்டுகால புறக்கணிப்பின் பயனாக அனுபவித்த துயரங்களின் வெளிப்பாடாக கடந்த 25/11 2007 அன்று சுமார் 1 லட்சம் மலேசிய இந்தியர்கள் கோலாலம்பூர் மாநகரை முற்றுகையிட்டனர். இந்தியர்களின் உரிமைக்காக நடத்தப்பட்ட அந்த அமைதி மறியல் பல்வேறு அரசியல் நிகழ்வுகளுக்கு வித்திட்டிருந்தாலும் இந்தியர்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டுவருவதில்  எந்த தரப்பும் இதுவரை  முனைப்பு காட்டவில்லை.

1hind ganesanஇந்தியர்களின் உரிமைக்கான அந்த எழுச்சி மறியலை அரசியல் சித்தாந்தங்களுக்கு அப்பால் கொண்டு செல்ல வேதமூர்த்தி இப்போது களமிறங்குகிறார். நம் நாட்டை ஆள்பவர்கள் எந்த அரசியல் கூட்டணியை சார்ந்தவர்களாக  இருந்தாலும் இந்நாட்டில் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை ஒரு தேசிய சவாலாக கருதி அவற்றை களைவதற்கான தார்மீக பொறுப்பை ஏற்க்கவேண்டும்.  வேதமூர்த்தி  மேற்கொள்ளும் உண்ணாவிரத பிரார்த்தனை இந்தியர்களின் அவல நிலையை அரசுக்கும் மலேசிய மக்களுக்கும் உணர்த்தி அவர்களுக்குள்ள கடமையையும் தார்மீக பொறுப்பையும் உணர்த்தும் நோக்கத்தில் அமைகிறது.

இந்த உண்ணாவிரத பிரார்த்தனை , ஹிண்ட்ராப் அமைப்பின் ஐந்தாண்டு செயல் திட்ட வரைவில் குறிப்பிட பட்டிருக்கும் நிரந்தர தீர்வுகளின் வழி இந்தியர்களுக்கு ஒரு விடியலை ஏற்படுத்த வேதமூர்த்தி எடுத்திருக்கும் மேலும் ஒரு முயற்ச்சியாகும்.

இந்த உண்ணாவிரத பிரார்த்தனை எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 10ஆம் தேதி ரவாங் 17 1/2  ஆவது மைல், கம்போங் பெங்காளியில் வீற்றிருக்கும் அருள்மிகு அகோர வீரபத்திரர் – சங்கிலி கறுப்பர் ஆலயத்தில் , மகா சிவராத்ரியின் முதல் கால பூஜைக்குப் பின் இரவு 7.00 மணிக்கு துவங்கி, தொடரும். வெறும் தண்ணீரை மட்டுமே அருந்தி தமது உடல் நிலை அனுமதிக்கும் வரை வேதமூர்த்தி இந்த உண்ணாவிரத பிரார்த்தனையில் ஈடுபடுவார் என கணேசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: