கம்போங் தண்டுவோ-வில் குண்டு வீச்சு தொடங்கியுள்ளது, கிராமவாசிகள் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறினர்

sabahகடந்த மூன்று வாரங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிக்காரர்கள் பதுங்கியுள்ள கம்போங் தண்டுவோ-விலிருந்து அந்நிய ஊடுருவல்காரர்களை அகற்றுவதற்கான நடவடிக்கை இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.

அந்தத் தகவலை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று காலை அறிவித்தார். அந்தப் பகுதியில் பதுங்கியுள்ள ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்களைப் பிடிப்பது அந்த நடவடிக்கையின் நோக்கம் என அவர் சொன்னார்.

“அமைதியை விரும்பும் நாடு என்ற முறையில் மலேசியா பூசல்களை பேச்சுக்கள் மூலம் தீர்க்கும் கடமையை நிலை நிறுத்தி வருகிறது. ரத்தம் சிந்தப்படுவதைத் தடுப்பதற்கு நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி அளிக்கவில்லை. அதற்கு நேர்மாறாக மலேசியப் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது,  மலேசிய போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மலேசியர்கள் குறிப்பாக சபாவில் உள்ளவர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சமடைந்துள்ளனர்,” என அவர் சொன்னார்.

“ஆகவே மக்கள் விரும்புவது போல நாட்டின் இறையாண்மையையும் கௌரவத்தையும் பாதுகாக்க அரசாங்கம் பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

sabah1ஊடுருவல்காரர்கள் வெற்றி அடைய முடியாது என பிலிப்பின்ஸ் அதிபர் பெனிக்னோ அக்கொனோவும் எச்சரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் ஏழு இராணுவப் பட்டாளங்கள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது.

கம்போங் தண்டுவோ-க்கு அருகில் அந்நிய ஊடுருவல்காரர்கள் பதுங்கியுள்ள இடத்தில் இன்று காலை மணி 7.30 வாக்கில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டன.

“அந்தப் பகுதியில் குண்டு வீச்சு தொடங்கியுள்ளது. நாங்கள் வானத்தில் ஜெட் சண்டை விமானங்களைப் பார்த்தோம். நான்கு முறை அவை குண்டுகளை வீசின,” என்று 38 வயது நாசிர் அஸ்ராமா என்ற கிராமவாசி சொன்னார்.

இதனிடையே துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்த இடத்தைச் சுற்றிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குக் வெளியேறுகின்றனர்.