சாபாவின் லாஹாட் டத்துவில், கம்போங் தண்டுவோவில் பாதுகாப்புப் படைகள் தாக்குதலில் இறங்கியுள்ளன. இன்று காலை ஏழு மணிக்கு முதல்கட்டமாக வான் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தக் கடலோர கிராமப்பகுதி பக்கம் மூன்று வெடிப்பொலிகள் செவிமடுக்கப்பட்டன.
எஃப்/ஏ-18, ஹோக் ரக போர்விமானங்கள் வான் தாக்குதலில் ஈடுபட்டன. அதனை அடுத்து குழிபீரங்கிகள் குண்டுகள் பொழிந்தன. அதன்பின்னர் இராணுவம் தரைத்தாக்குதலில் இறங்கியது.
அந்தக் கிராமத்தைச் சுற்றி முற்றுகை இட்டிருக்கும் போலீஸ் மின்னல்ப டையினர் கிராமத்தை நோக்கி முன்னேறிச் செல்லக் காணப்பட்டனர்.
கம்போங் தண்டுவோவிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில், பெல்டா சஹாபாட் 16-இல், தங்குவிடுதி ஒன்றில் தங்கியுள்ள பெர்னாமா செய்தியாளர்கள், குண்டு முழக்கத்தைச் செவிமடுத்திருக்கிறார்கள். மூன்றாவது வெடிப்பொலிதான் மிகப் பெரிதாக இருந்ததாம். தங்குவிடுதியின் சன்னல் கண்ணாடிகள் அதிர்ந்ததாகக் கூறினார்கள்.
இரண்டு நூரி ஹெலிகாப்டர்கள் வானத்தில் வட்டமிட்டன.
கம்போங் தண்டுவோ அருகில் உள்ள கம்போங் பத்து, கம்போங் லபியான் ஆகிய கிராமங்களின் குடியிருப்பாளர்கள் நேற்றிரவே அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
சூலு சுல்தானின் ஆள்கள் எனக் கூறிக்கொள்ளும் ஆயுதம்தாங்கிய கும்பல் பிப்ரவரி 12-இல், சாபாவுக்குள் ஊடுருவி கம்போங் தண்டுவோ பகுதியில் பதுங்கி இருந்துகொண்டு தொல்லை கொடுத்து வருகிறார்கள்.
மார்ச் முதல் நாள், அந்தக் கிராமத்துக்குள் சென்ற இரண்டு போலீஸ் அதிகாரிகள் கொன்றார்கள். மூவரைக் காயப்படுத்தினர்.
அதற்கு அடுத்த நாள் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கம்போங் சிமுனுலில் ஆறு போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர்.
போலீசாருடன் நடந்த சண்டையில் இதுவரை 18 ஊடுருவல்காரர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
பேச்சுகள் முறிந்தன
இவ்விவகாரத்தில் மேலும் இரத்தம் சிந்தப்படுவதைத் தவிர்க்கவே அரசாங்கம் விரும்பியது. அதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவை பலனளிக்கவில்லை என்பதால் நாட்டின் இறையாண்மையையும் கெளரவத்தையும் காக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாயிற்று என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று அறிக்கை ஒன்றில் கூறியிருந்தார்.