லஹாட் டத்துவுக்கு அருகில் உள்ள கம்போங் தண்டுவோ-வில் ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து சிவப்புப் பகுதிகள் எனப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள சண்டை நிகழ்ந்த பகுதிகளில் போலீசார் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளனர்.
கம்போங் தண்டுவோ, லாபியான், தஞ்சோங் பத்து ஆகியவற்றின் நுழைவாயில்களுக்கு அருகே ‘இடைப்பட்ட பகுதிகள்’ ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொது மக்கள் நடமாடும் இடங்களுக்கும் சண்டை நிகழ்ந்த இடங்களுக்கும் இடையில் அவை அமைந்துள்ளன. அந்தப் பகுதிகளுக்குள் பொது மக்களும் அங்கீகாரம் இல்லாத யாரும் நுழைய முடியாது.
இதனிடையே அருகில் உள்ள Felda Sahabat 16 போன்ற இடங்களில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக வீடுகளுக்குள் தங்கியுள்ளனர்.
ஊடுருவல் நிகழ்ந்த இடத்திலிருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லஹாட் டத்து நகரத்தில் மக்கள் வழக்கம் போல தங்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக பெர்னாமா தெரிவித்தது.
பெரும்பாலான வர்த்தக அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தாலும் மளிகைக் கடைகளும் காலணிக் கடை ஒன்றும் தொலைத் தொடர்புக் கடை ஒன்றும் திறக்கப்பட்டிருந்தன.
பிப்ரவரி 9ம் தேதி முதல் கம்போங் தண்டுவோ-வில் பதுங்கியுள்ள ஊடுருவல்காரர்களுக்கு எதிராக ஆகாய, தரைத் தாக்குதல்களை இன்று காலையில் பாதுகாப்புப் படைகள் தொடங்கின.
மார்ச் முதல் தேதியும் இரண்டாம் தேதியும் கம்போங் தண்டுவோ-விலும் செம்போர்ணா கம்போங் சிமுனுலிலும் நிகழ்ந்த இரண்டு மோதல்களில் எட்டுப் போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர்.
சுலு சுல்தான் இராணுவம் என தங்களை அழைத்துக் கொண்ட ஊடுருவல்காரர்களில் 18 பேர் அவ்விரு மோதல்களிலும் கொல்லப்பட்டனர்.
சரணடைய மறுத்துள்ள ஊடுருவல்கார்கள் மீது பாதுகாப்புப் படைகள் இப்போது தாக்குதலைத் தொடங்கியுள்ளன.
-பெர்னாமா