இசி: ‘நம்பத்தக்கதல்ல’என்ற குற்றச்சாட்டு அபத்தமானது

13ge

மக்கள் தன்னை நம்புவதில்லை என்று கூறப்படுவதைத் தேர்தல் ஆணையம்(இசி) மறுக்கிறது. மக்களுக்குத் தன்மீது நம்பிக்கை உண்டு என்று கூறும் இசி அதை நிரூபிக்க ஆய்வுத் தகவல் ஒன்றையும் சுட்டிக்காட்டியது.

“தேசிய பேராசிரியர் மன்றம் (என்பிசி) இசி அறிவிக்கும் முடிவுகளை மக்கள் நம்புகிறார்களா என்பதைக் கண்டறிய ஆய்வு ஒன்றை நடத்தியது.

13 ge1“ஆய்வில் கலந்துகொண்ட மலாய்க்காரர்களில் 87.9 விழுக்காட்டினரும், சீனர்களில் 75.7 விழுக்காட்டினரும்,  இந்தியர்களில் 85.1 விழுக்காட்டினரும்  சாபாக்காரர்களில் 92.2 விழுக்காட்டினரும் சரவாக்கியர்களில் 85.1 விழுக்காட்டினரும் நம்புவதாகக் கூறினர்”, என இசி செயலாளர் கமருடின் முகம்மட் பாரியா கூறினார். நேற்று கோலாலும்பூரில் 13வது பொதுத் தேர்தல் மீதான கருத்தரங்கம் ஒன்றில் அவர் பேசினார்.

என்பிசி நடத்திய அந்த ஆய்வில், 13வது பொதுத் தொடர்பில் இசி-இன் நடவடிக்கைகளில் ஒளிவுமறைவு இல்லை, எல்லாம் வெளிப்படையாகவே நடக்கிறது என்று மலாய்க்காரர்களில் 76.2 விழுக்காட்டினரும் சீனர்களில் 59 விழுக்காட்டினரும் இந்தியர்களில் 81.9 விழுக்காட்டினரும் சாபாக்காரர்களில் 81.9 விழுக்காட்டினரும் சரவாக்கியரில் 71.1 விழுக்காட்டினரும் நம்புகிறார்கள்.

அரசாங்கத்துக்குக் கட்டுப்படாமல் சுயேச்சையாக செயல்படுகிறதா?

மாற்றரசுக்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த அக்கருத்தரங்கில் மாலை நேர அமர்வில் உரையாற்றிய கமருடின், சக பேச்சாளர்களான கல்விமான் ஒங் கியான் மிங்கும் புக்கிட் பெண்டேரா எம்பி லியு சின் தோங்கும் இசி-யைத் தாக்கிப் பேசியதை அடுத்து மேற்சொன்ன ஆய்வு முடிவுகளை முன்வைத்தார்.

மக்கள் இசி-யை நம்புகிறார்களா என்றும் அதில் அரசுப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதைப் பார்க்கும்போது அது உள்ளபடியே அரசாங்கக் கட்டுப்பாட்டில் இல்லாமல் சுயேச்சையாக செயல்படுவதாகக் கூறுவதை நம்ப முடிகிறதா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

13 ge2இன்னொரு அமர்வில் உரையாற்றிய பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் (இடம்) எம்பி-களுக்கு வழங்கப்படும்  தொகுதி அலவன்ஸ் தொகை பற்றிக் கருத்துரைத்தார்.  அது பிஎன் எம்பிகளுக்குக் கூடுதலாகவும்  மாற்றரசுக் கட்சிக்குக் குறைத்தும் கொடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

அதற்குப் பதிலடி கொடுப்பதுபோல் பேசிய சகப் பேச்சாளர் ஹுலு சிலாங்கூர் எம்பி பி.கமலநாதன், பக்காத்தான் ஆட்சியில் உள்ள சிலாங்கூரிலும்  அதுதான்  நடக்கிறது  என்றார்.

சிலாங்கூர் அரசு, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கும்போது பிஎன் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நியாயமான ஒதுக்கீட்டை வழங்குவதில்லை என்று கூறினார்..

ஆதலால்,  பக்காத்தான் இப்படிச் செய்யும்போது “கூட்டரசு நிலையில் பிஎன் செய்வதும் சரியே”, என்றார்.

 

TAGS: