சபா நெருக்கடியில் மொரோ தேசிய விடுதலை முன்னணியும் (MNLF) சேர்ந்து கொண்டுள்ளது. மலேசியாவில் பயிற்சி பெற்ற அதன் போராளிகள் சபாவில் போராடிக் கொண்டிருக்கும் சுலு சுல்தான் படைகளுக்கு உதவி செய்வர் என அந்த முன்னணியின் முன்னாள் தலைமைப் பிரச்சாரப் பிரிவுத் தலைவர் ஹாட்ஜி அக்மட் பாயாம் அறிவித்துள்ளார்.
MNLF போராளிகள் சபாவில் பயிற்சி பெற்ற பின்னர் அங்கு பெரும் எண்ணிக்கையில் ஆயுதங்களை ஆழமாக பதித்து வைத்திருக்கக் கூடும் என பாயாம் மணிலா புல்லட்டின் என்ற நாளேட்டிடம் கூறினார்.
அந்த ஆயுதங்கள் மலேசியா வழியாக காலஞ்சென்ற லிபிய அதிபர் முவாமார் கடாபி வழங்கியவை என்றும் அவர் சொன்னார். அவற்றுள் பெல்ஜியத்தில் தயாரிக்கப்பட்ட ஜி1, FAL ஆயுதங்களும் அடங்கும் என்றார் அவர்.
சபாவில் தங்கி விட்ட MNLF போராளிகள் அவற்றை நல்ல முறையில் பதுக்கி வைத்திருக்கக் கூடும் என்பதால் அவற்றை மலேசியப் படைகளினால் கண்டு பிடிக்க முடியவில்லை என அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
மலேசியாவின் ‘கொடுமைகள்’ எனத் தாங்கள் கூறிக் கொண்டவற்றுக்கு எதிரான போராட்டத்தில் சபாவில் வாழும் பிலிப்பினோ மக்களும் சேர்ந்து கொண்டுள்ளதாகவும் பாயாம் கூறிக் கொண்டார்.
அமெரிக்க ‘வரலாற்றுப் பிழையை’ திருத்த வேண்டும்
நடப்பு சூழ்நிலையிலிருந்து ‘திரும்ப முடியாது’ எனக் குறிப்பிட்ட அவர், அந்த முற்றுகையைத் தொடர்ந்து மொரோ மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட ‘வரலாற்றுப் பிழையை’ திருத்தி சபா மீதான கோரிக்கையைத் தீர்க்க அமெரிக்க அரசாங்கம் உதவும் என நம்பிக்கை தெரிவித்தார்.
“இது தான் சிறந்த நேரம், வாய்ப்பு. அமெரிக்கா இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் என்றென்றும் இழக்கப்பட்டு விடும்.”
“சுதந்திர உலகில் ஒரே தலைவர் என்ற முறையிலும் மனித உரிமைகள், சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றுக்கான ஒரே காவலர் என்ற முறையிலும் மொரோ மக்களுக்கு எதிரான வரலாற்றுப் பிழையைத் திருத்துவதற்கு அமெரிக்க அரசாங்கத்துக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது,” என்றும் பாயாம் சொன்னார்.
இதனிடையே பிலிப்பின்ஸ் அதிபர் மூன்றாவது பெனிக்னோ அக்கினோ தம்மை கை கழுவி விட்டதாக தம்மை சுலு சுல்தான் எனப் பிரகடனம் செய்து கொண்டுள்ள மூன்றாவது ஜமாலுல் கிராம் குற்றம் சாட்டியுள்ளதாகவும் மணிலா புல்லட்டின் செய்தி வெளியிட்டுள்ளது.
தாம் இப்போது ஐநா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவற்றின் ஆதரவை நாடுவதாகவும் அவர் சொன்னார்.
சபாவில் உள்ள தமது ஆதரவாளர்களுடைய உயிர்களைக் காப்பாற்றுமாறு அக்கினோ விடுத்த வேண்டுகோள் பற்றிக் குறிப்பிட்ட அவர், இனிமேல் அந்த விவகாரம் இறைவன் கருணையைப் பொறுத்தது என்றார்.
“இனி இல்லை. இனிமேல் பாதுகாக்க முடியாது. எல்லாம் வல்ல அல்லாஹ் கையில்.”