‘சபாவில் மோரோ போராளிகளும் தாக்குவர் என்பதற்கு ஆதாரமில்லை’

zahidMNLF எனப்படும் மோரோ தேசிய விடுதலை முன்னணி போராளிகள், சபா லஹாட் டத்துவில் “அரச சுலு இராணுவத்துடன்” தொடரும் இழுபறியை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ள மலேசியப் படைகளுடன் சண்டையிடுவதற்கு உதவக் கூடும் எனக் கூறப்படுவதை தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி நிராகரித்துள்ளார்.

“நாம் அதனைப் பொருட்படுத்தக் கூடாது. ஏனெனில் அதற்கு ஆதாரமே இல்லை,” என அவர் இன்று பிற்பகல் லஹாட் டத்துவில் உள்ள பெல்டா சஹாபாட் இல்லத்தில் நிருபர்களிடம் கூறினார்.

சபாவில் நீண்ட காலத்துக்கு முன்பு  குடியேறி விட்ட முன்னாள் MNLF போராளிகள் லஹாட் டத்து, கம்போங் தண்டுவோ-வில் உள்ள சுலு ஊடுருவல்காரர்களுக்கு உதவப் போவதாக அந்த அமைப்பின் முன்னாள் பிரச்சாரப் பிரிவுத் தலைவர் ஹாட்ஜி அக்மட் பாயாம் கூறியதாக பிலிப்பின்ஸ் நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சபாவில் அந்தப் போராளிகள் நிறைய ஆயுதங்களைப் பதுக்கி வைத்துள்ளதாகவும் அவர்கள் அவற்றை இப்போது பயன்படுத்துவர் என்றும் பாயாம் கூறிக் கொண்டார்.

பாதுகாப்புப் படைகள் இப்போதைக்கு கம்போங் தண்டுவோ மீது கவனம் செலுத்தி வருகின்றன என்றாலும் மற்ற ஊடுருவல்கள் பற்றி தகவல்கள் கிடைத்தால் விரைவாக செயல்படுவர் என ஸாஹிட் மேலும் தெரிவித்தார்.

“ஊடுருவல்கள் நிகழ்ந்துள்ள இடங்கள் பற்றி நாங்கள் கேள்விப்பட்டால் ஆயுதப்படைகளும் போலீசாரும் எப்போதும் தயார் நிலையில் உள்ளனர்,” என்றார் அவர்.