பெட்டாலிங் ஜெயாவில் பெர்சே 2.0 செயலக அலுவலகம் இன்று காலையில் கொள்ளையிடப்பட்டது. அந்தச் சம்பவத்தில் 600 ரிங்கிட் ரொக்கமும், கைத்தொலைபேசிகளும் இலக்கவியல் கேமிராக்களும் குரல் பதிவு சாதனம் ஒன்றும் திருடப்பட்டுள்ளன.
அந்தத் திருட்டுச் சம்பவத்திற்கு ‘அரசியல் நோக்கம் காரணமாக இருக்க முடியாது’ என சுதந்திரமான நியாயமான தேர்தல்களுக்குப் போராடும் அந்த அமைப்பின் வழிகாட்டல் குழு உறுப்பினர் மரியா சின் அப்துல்லா கூறினார்.
இன்று காலை மணி 8.30 வாக்கில் செயலக ஊழியர்கள் அலுவலகத்தைத் திறந்த போது சிவப்புத் தொப்பி அணிந்திருந்த ஒர் ஆடவர் சமையலறைக் கதவு வழியாக வெளியே ஒடுவதைக் கண்டதாக அவர் சொன்னார்.
“அந்தத் திருடன் மேசை மீது ஆரஞ்சுப் பழத் தோலையும் அரை கப் தண்ணீரையும் விட்டுச் சென்றுள்ளான்,” எனத் தெரிவித்த மரியா, அலுவலகம் சூறையாடப்பட்டதாகக் கூறினார்.
எதிர்காலத்தில் திருட்டுக்களைத் தடுப்பதற்கு அபாய ஒலி முறையையும் கேமிராக்களையும் பொருத்துவது பற்றி பெர்சே செயலகம் பரிசீலிக்கும் என்றும் அவர் கூறினார்.
பெர்சே போலீசில் புகார் செய்துள்ளதாக செயலக ஊழியரான மந்திப் சிங் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
போலீஸ் தடயவியக் குழு ஒன்று இன்று பிற்பகல் சம்பவம் நடந்த இடத்தில் புலனாய்வுகளை மேற்கொண்டது.