ஐஜிபி: பாதுகாப்புப் படைகள் எதிரிகளைக் கவனத்துடன் தேடி வருகிறார்கள்

1igpஇன்று காலை சாபா, லாஹாட் டத்துவில் மேற்கொள்ளப்பட்ட இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படைகள் “எதிரிகளைக் கவனத்துடன் வேட்டையாடி” வருவதாக இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் இஸ்மாயில் ஒமார் கூறினார்.

“இந்தத் தேடும் நடவடிக்கை 4 சதுர மைல் பரப்பளவில் நடந்து வருகிறது. அப்பகுதியில் பகைவர்கள் இன்னும் பதுங்கி இருக்கிறார்கள்”. இன்று மாலை லாஹாட் டத்துவில் சஹாபாட் பெல்டாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் இஸ்மாயில் இவ்வாறு கூறினார்.

1igp1“கவனத்துடன் இருக்குமாறு அவர்களிடம் கூறியிருக்கிறேன். மேலும் சேதம் ஏற்படுவதைக் காண விரும்பவில்லை. அதனால் அந்நடவடிக்கை மிக மெதுவாக நடந்து வருகிறது”, என்றார்.

இதுவரை ஏற்பட்டுள்ள சேதங்களை உறுதிப்படுத்த இயலாதிருக்கிறது என்றும் இஸ்மாயில் கூறினார்.

ஊடுருவல்காரர்களின் உடல்கள் சிதைக்கப்பட்டதாக பிலிப்பீன்ஸ் ஊடகங்களில் வெளிவந்த தகவல்களை அவர் மறுத்தார்.

“உண்மை தெரியாமல் எப்படி இப்படி ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தலாம்?”, என்றவர் கேட்டார்.

நடவடிக்கைக்கு உட்பட்ட பகுதியிலிருந்து ஊடுருவல்காரர்கள் தப்பி இருக்க முடியுமா என்றும் அவரிடம் வினவப்பட்டதற்கு, “தப்பி இருக்க முடியாது என்றே நினைக்கிறோம். அவர்கள் அங்குதான் இருக்க வேண்டும். அதனால்தான் மிக மெதுவாக தேடி வருகிறோம்”, என்றார்.

‘ஒப்ஸ் டவுலாட்’

1igp2பாதுகாப்புப் படைகள்  இன்று காலை ஏழு மணிக்கு தாக்குதலில் இறங்கின. முதல்கட்டமாக வான் தாக்குதல் நடத்தப்பட்டது.  மூன்று எஃப்-18 ரக போர்விமானங்கள் வான் தாக்குதலில் ஈடுபட்டன. அதன்பின்னர் இராணுவம் தரைத்தாக்குதலைத் தொடங்கியது.

இராணுவ நடவடிக்கை தஞ்சோங் பத்துவிலும் மேற்கொள்ளப்பட்டதா என்பது தெரியவில்லை. அங்குள்ளவர்கள் ஊடுருவல்காரர்கள் அப்பகுதியைக் கைப்பற்றி கிராமவாசிகளைப் பிணையாளிகளாக பிடித்து வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

மூன்று வாரங்களாக ஊடுருவல்காரர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைக்கு ‘ஒப்ஸ் சூலு’என்று பெயரிடப்பட்டிருந்தது. இப்போது அதை மாற்றி ‘ஒப்ஸ் டவுலாட் (இறையாண்மை நடவடிக்கை)’ என்று வைத்திருக்கிறார்கள்.