இன்று காலை லாஹாட் டத்துவில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையில், ஆயுதம் தாங்கிய கும்பலுக்குத் தலைமைதாங்கும் அஸ்ஸிமுடி கிராம் கொல்லப்பட்டதாகக் கூறும் மலேசிய ஊடகங்களின் செய்திகளை சூலு சுல்தானின் அலுவலகம் மறுத்துள்ளது.
பிலிப்பின் தொலைக்காட்சியான டிவி5–இன் இணையத்தளமான InterAksyon.com, இன்று பிற்பகல் மணிலாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் சூலு சுல்தான் அலுவலகப் பேச்சாளர் அப்ராஹம் இட்ஜிரானி செய்தியாளர்கள் முன்னிலையில் அஸ்ஸிமுடியுடன் கைபேசியில் பேசியதாகக் கூறிற்று.
“ராஜா மூடா அழைத்துப் பேசினார். இது மலேசிய போலீஸ்/இராணுவ நடவடிக்கையில் நம் சகோதரர்கள் துடைத்தொழிக்கப்பட்டதாக மலேசிய அரசாங்கம் செய்துவரும் பரப்புரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
“டத்து ராஜா மூடா (அஸ்ஸிமுடி)வும் அவரின் ஆதரவாளர்களும் இன்னும் உயிருடன், துடிப்புடன் இருக்கிறார்கள்”, என்று இட்ஜிரானி (இடம்) கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸிமுடி “நரியைப் போன்றவர்” என்று வருணித்த அவர், மலேசியப் படையினரிடமிருந்து தப்புவதற்காக அவர் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு மாறிக் கொண்டே இருப்பார் என்றார்.
உத்துசான் மலேசியா, இன்று பிற்பகல் வெளியிட்ட குறுஞ்செய்தியில் காலைநேரத் தாக்குதலில் அஸ்ஸிமுடி கொல்லப்பட்டதாய் நம்பப்படுவதாகக் கூறியிருந்தது.
முன்னதாக, மலேசிய விமானங்கள் பொழிந்த குண்டுகள் தங்கள் பக்கம் விழவில்லை என்றும் தாக்குதலுக்காகக் குவிக்கப்பட்ட மலேசியப் படையினர்மீதே விழுந்ததாகவும் அஸ்ஸிமுடி தம்மிடம் கூறினார் என்றும் இட்ஜிரானி தெரிவித்தார்.
ஆனால், போலீஸ் படைத் தலைவர் மலேசியத் தரப்பில் எந்தச் சேதமுமில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். அதே வேளை எதிரிகளுக்கு ஏற்பட்ட சேதம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் சொன்னார்.