ஹிண்ட்ராப் உண்ணாவிரதம் காலத்தின் கட்டாயம்

-வி.சம்புலிங்கம், துணைத் தலைவர், ஹிண்ட்ராப். மார்ச் 6, 2013.

மலேசிய இந்தியர்களின் சமூக பொருளாதார பின்னடைவுகளுக்கு நிரந்தர தீர்வைக் கொண்டுவரும் அனைத்து முயற்சிகளும் தேக்கம் கண்ட பின்னரே உண்ணாவிரத பிரார்த்தனைக்கு ஹிண்ட்ராப் இயக்க பொறுப்பாளர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத வகையில், இந்தியர்களின் விடியலுக்காக தீட்டப்பட்டதுதான்waythamoorthy-Hindraf ஹிண்ட்ராப் ஐந்தாண்டு செயல் திட்டம். இது குறித்து பக்காத்தான் ராக்யாட் அரசியல் கூட்டணி தலைவர்களிடம் கடந்த 4 மாதங்களாக வரி வரியாக விளக்கியும், எழுத்துப்பூர்வமான உத்திரவாதத்தின் தேவையை வலியுறுத்தியும் வந்துள்ளோம். இருந்த  போதிலும்  இது நாள் வரை நம் நியாயமான கோரிக்கைகளுக்கு அவர்கள் இன்னும் செவி சாய்க்கவில்லை. அதற்கும் மேலாக பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையில் இந்தியர்களுகென்று குறிப்பிட்ட திட்டங்கள் ஒன்று கூட இல்லாதது நமக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

அதே வேலையில் ஹிண்ட்ராப் மீதான தடையை நீக்கிய பின்னர், பாரிசான் நேசனல் தலைவருமாகிய பிரதமரை சந்திக்க இணக்கம் தெரிவித்தோம். பிரதமரிடம் இருந்தும் நமக்கு சாதகமான முன்னேற்றங்கள் ஏதும் இதுவரை ஏற்படவில்லை.

அடுத்த பொதுத் தேர்தலில் வென்று ஆட்சியமைக்கப் போவது இந்த இரண்டு அரசியல் கூட்டணிகளில் ஏதோ ஒன்றுதான்.  இந்தியர்களின் வாக்குகள் இல்லாமல் யாரும் புத்திரா ஜெயாவை கைப்பற்ற முடியாது என்பது வெட்ட வெளிச்சம். 

இந்தியர்களின் வாக்குகள் மட்டும் வேண்டும். ஆனால் அவர்களின் தொடரும் அவலங்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்பதுபோல் இருக்கிறது இவ்விரண்டு தரப்பினரின்  போக்கு. இந்நிலையில் இந்தியர்களின் கருவறை துவங்கி கல்லறை வரையிலும் அனுபவிக்கும் நெடு நாளைய துயரங்கள் கலையப்படுவதற்காகவே  செயல் படும் ஹிண்ட்ராப், இந்தியர்களை ஏமாளிகளாகக் கருதும் அரசியல் வாதிகளின் போக்கை அனுமதிக்க முடியாது.

Hindraf-Sampulingamநம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் அரசாள்பவர்களுக்கும், அரசாள எண்ணம் கொண்டுள்ளவர்களுக்கும், மக்களுக்கும்   அரசியல்  சித்தாந்தங்களையும் தாண்டி உள்ள தார்மீக  கடமையையும் பொறுப்பையும் உணர்த்தும் நோக்கில் அமைவதுதான் ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தியின்  தொடர்  உண்ணாவிரத   பிரார்த்தனையாகும்.

பெயருக்கோ, புகழுக்கோ, பதவிக்கோ, பட்டங்களுக்கோ இந்த உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படவில்லை. இது முற்றிலும் அரசியலுக்கு அப்பாற்ப்பட்டது. எனவே இந்த முயற்சியை யாரும் கொச்சைப் படுத்தவோ, அவமதிக்கவோ வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். மலேசிய இந்தியர்கள் இழந்த சுயகௌரவத்தையும், சுய மரியாதையையும் மீட்கும் வகையில் அமையும் இந்த உண்ணா விரத பிரார்த்தனைக்கு உடன் வராவிட்டாலும் இடைஞ்சல்கள் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். இந்த அரிய முயற்சிக்கு காலமும் மக்களும் உடனிருந்து விடை காணட்டும்.

எதிர்வரும்  ஞாயிற்றுக்கிழமை ( மார்ச் 10 ) இரவு மணி 7.00க்கு மகா சிவராத்திரி முதல் கால பூசயை தொடர்ந்து ரவாங் 17 1/2 ஆவது மைல், கம்போங் பெங்காளி அருள்மிகு அகோர வீரபத்திரர்-சங்கிலி கறுப்பர் ஆலயத்தில் ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி வெறும் தண்ணீரை மட்டுமே அருந்தி தமது தொடர் உண்ணா விரத பிரார்த்தனையை மேற்கொள்கிறார். பொதுமக்கள் வருகை தந்து ஆதரவு நல்கும்படி பணிவன்புடன் வேண்டுகிறோம்.தொடர்புக்கு 016 354 5869 / 017 623 0052.

TAGS: