சுல்தான்: ஜாய்ஸ் சோதனை தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கப் போதுமான ஆதாரம் இல்லை

சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா, ரமலான் மாதத்தின்போது டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலயத்தில் (டியுஎம்சி) நடைபெற்ற ஒரு நிகழ்வில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களின் நம்பிக்கைகளையும் கெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்று கூறினார்.

என்றாலும், போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால் அதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவியலாது என்று ஊடகங்களுக்குத் தொலைநகல்வழி விடுக்கப்பட்ட அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் 3-இல், சிலாங்கூர் இஸ்லாமிய சமய விவகாரத்துறை (ஜாய்ஸ்), டியுஎம்சியில் நடைபெற்றுக்கொண்டிருந்த நன்றிநவிலும் நிகழ்வு ஒன்றில் புகுந்து அதிரடிச் சோதனை நடத்தியது.அதில் கலந்துகொண்டிருந்த 12 முஸ்லிம்களிடமும் அது பின்னர் விசாரணை நடத்தியது.

“ஜாய்ஸ் அறிக்கையை ஆழமாக ஆராய்ந்து, சமய, சட்ட வல்லுனர்களுடனும் ஆலோசனை கலந்த பின்னர், எந்தத் தரப்பினருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கில்லை என்பதை ஒப்புக்கொள்கிறோம்”, என்று சுல்தான் கூறினார்.

ஜாயிஸ் அறிக்கையின்படி பார்த்தால் டியுஎம்சிமீதான அதன் “சோதனை” சரியான முறையில் மேற்கொள்ளப்பட்ட ஒன்றுதான் என்று தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“ஜாய்ஸின் நடவடிக்கை சரியானதே, அது சிலாங்கூர் சட்டங்களைமீறிச் செயல்படவில்லை என்பதில் மனநிறைவு கொள்கிறோம்.”

விசாரணைக்கு இலக்கான 12 முஸ்லிம்களைப் பொருத்தவரை, “அவர்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த” அவர்களுக்கு  சமய அறிவுரை நல்கப்படும் என்றாரவர்.

நடந்தது என்னவென்பதைத் துல்லியமாக தெரிந்துகொள்ளாமல் ஜாய்ஸ் நடவடிக்கையைத் தப்பாக அர்த்தப்படுத்திக்கொள்ளவோ குறைசொல்லவோ கூடாது என்று சுல்தான் கேட்டுக்கொண்டார்.

இனிமேல் முஸ்லிம்களிடம் மற்ற சமயங்களைப் பரப்பும் முயற்சிகள் நடைபெறாது என்று நம்புவதாகவும் அவர் சொன்னார்.

“சிலாங்கூரில் பின்பற்றப்படும் இஸ்லாம் சகிப்புத்தன்மை கொண்டது. முஸ்லிம்கள்  மற்ற சமயங்களை மதிக்கும்படி எப்போதும் ஊக்குவிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள்.

“ஆனால், எவரும் அதை ஒரு வாய்ப்பாகக் கொண்டு மற்ற சமயங்களை முஸ்லிம்களிடையே  பரப்புவதற்கு முனையக் கூடாது.

சிலாங்கூரில் உள்ள முஸ்லிம்-அல்லாதார் அவர்களின் சமய உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்திய சுல்தான் சட்டத்துக்கு உள்பட்டு அதைச் செய்திட வேண்டும் என்றார்.

“உங்கள் உரிமைகளையும் சமயத்தையும் காத்துக்கொள்ளுங்கள்.அதே வேளை முஸ்லிம்களின் சமயத்தையும் நம்பிக்கைகளையும் கெடுக்க முனையாதீர்கள்”, என்றாரவர்.

TAGS: