சுலு சுல்தான் மூன்றாவது ஜமாலுல் கிராமின் தன்மூப்பான சண்டை நிறுத்தத்தை மலேசியா நிராகரித்துள்ளது.
அந்த சுல்தானுடைய ஆதரவாளர்கள் சரணடைய வேண்டும் என அது விரும்புவதாக தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி கூறினார்.
“தீவிரவாதிகள் நிபந்தனையில்லாமல் சரணடைய வேண்டும். மலேசியா தன்மூப்பான சண்டை நிறுத்தத்தை நிராகரிக்கிறது.”
“சண்டை நிறுத்தம் செய்ய ஜமாலுல் கிராம் முன் வந்துள்ளதை நம்ப வேண்டாம். மலேசியா, சபா மக்களுடைய நன்மைக்காக எல்லா தீவிரவாதிகளும் துடைத்தொழிக்கப்படுவர்,” என அவர் டிவிட்டரில் எழுதியுள்ளார்.
இன்று பிற்பகல் மணி 12.30 முதல் ‘சுல்தான்’ தன்மூப்பாக சண்டை நிறுத்தத்தைப் பிரகடனம் செய்தார். பதிலுக்கு மலேசியாவும் சண்டை நிறுத்தம் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
“அவர்கள் எந்த நடவடிக்கையிலும் இறங்க மாட்டார்கள். அவர்கள் இருக்கும் இடத்திலேயே இருப்பார்கள் அவர்கள் தங்கள் நடவடிக்கையை விரிவு செய்ய மாட்டார்கள்,” என தீவிரவாதிகளைக் குறிப்பிட்ட அவரது அறிக்கை கூறியது. 100 முதல் 300 தீவிரவாதிகள் சபா, லஹாட் டத்து பகுதிக்குள் ஊடுருவியிருப்பதாக நம்பப்படுகின்றது.