இன்று பிற்பகல் மணி 1.00 க்கு கிள்ளான் போலீஸ் நிலையத்திற்கு தாமாகவே சென்று தமக்கு எதிராகச் செய்யப்பட்டிருக்கும் போலீஸ் புகார் மீது தம்மை உடனடியாக விசாரிக்கமாறு போலீசாரை வழக்கறிஞர் கா. ஆறுமுகம் கேட்டுக் கொண்டார்.
மார்ச் 1 ஆம் தேதி, முரளி த/ப சுப்ரமணியம் என்பவர் கிள்ளான் போலீஸ் நிலையத்தில் கா. ஆறுமுகத்திற்கு எதிராக போலீஸ் புகார் ஒன்றை செய்து அதனை பின்னர் நிருபர்களிடம் விநியோகம் செய்தார்.
சிறீலங்கா போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட ரிம3.2 மில்லியனுக்கான ஒரு காசோலையை கா.ஆறுமுகம் கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் எம்.சரவணனிடமிருந்து பெற்றுக் கொண்டார் என்பது முரளி செய்துள்ள போலீஸ் புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் ஒன்றாகும்.
முரளி செய்துள்ள போலீஸ் புகாரை முழுமையாக புலன்விசாரணை செய்து குற்றம் புரிந்தவர் எவராக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசாரை ஆறுமுகம் கேட்டுக் கொண்டார்.
மேலும், தாம் சொத்து சேர்த்துள்ளதாக முரளி செய்துள்ள புகாரையும் போலீசார் முழுமையாக புலன்விசாரிக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்பட்ட நிதியிலிருந்து ஒரு காசை தொடுவதுகூட மன்னிக்கக் கூடாத மாபெரும் பாவம் ஆகும் என்று ஆறுமுகம் கூறினார்.
புலன்விசாரணையை துரிதப்படுத்துமாறு போலீசாரை வலியுறுத்திய அவர், போலீஸ் விசாரணைக்கு உதவுவதற்கு 24 மணி நேரத்தில் எந்த நேரத்திலும் தாம் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
“என் மீது போலிஸ் புலன் விசாரணை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் புகார் செய்தவரும் அவருடன் இருந்த எனது நண்பரும் சமூக ஆய்வாளருமான வரதராஜுவும் போலீஸ் விசாரணையை துரிதப்படுத்த போலீசிக்கு நெருக்குதல் அளிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்ட ஆறுமுகம், போலீஸ் புலன்விசாரணையைத் துரிதப்படுத்துமாறு தாம் சிலாங்கூர் தலைமைப் போலீஸ் அதிகாரிக்கு கடிதம் எழுதப் போவதாகவும் கூறினார்.
இப்புகார் குறித்த இடைவிடாத அழைப்புகளையும், ஊடகச் செய்திகளையும் சுட்டிக் காட்டிய அவர், இதற்கான ஒரே வழி முரளி செய்துள்ள புகார் மீது போலீசார் மேற்கொண்ட புலன்விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகளை போலீசார் வெளியிடுவதுதான் என்றாரவர்.
தமிழ்ப் பேரவை மலேசியா பெர்ஹாட் வாரியத்தின் உறுப்பினரான ஆறுமுகம் உண்மையும் நீதியும் கோரும் எந்த கோரிக்கையையும் முழுமையாக ஆதரிப்பதாகக் கூறினார்.