மலாக்கா பக்காத்தான் செராமாவின் போது வன்முறை

ceramahஅரசியல்  வன்முறைகள் தொடருகின்றன. நேற்றிரவு மலாக்கா புக்கிட் கட்டில் நடந்த செராமா ஒன்றுக்கு அம்னோ குண்டர்கள் எனக் கூறப்பட்டவர்கள் இடையூறு செய்த போது பக்காத்தான் ராக்யாட் ஆதரவாளர் ஒருவர் காயமடைந்தார்.

கல் ஒன்றினால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட பின்னர் ஒர் ஆடவருடைய தலையிலிருந்து ரத்தம் கசியும் படத்தை பக்காத்தான் ஆதரவாளர்கள் முகநூலில் சேர்த்துள்ளனர்.

“எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுடன் பிகேஆர் புக்கிட் கட்டில் செராமாவில் கலந்து கொள்ள நான் மலாக்காவிலிருந்து வந்து சேர்ந்தேன்,” என ராசா நாடாளுமன்ற உறுப்பினர் லோக் சியூ பூக் டிவிட்டரில் நேற்று பின்னேரம் செய்தி அனுப்பியுள்ளார்.ceramah1

“அருகில் அம்னோ செராமா ஒன்றை நடத்திக் கொண்டிருந்தது. அதில் சில நூறு பேரே கலந்து கொண்டிருந்தனர். பொதுத் தேர்தலில் தோல்வி காணும் பயத்தைக் கொண்டிருந்தவர்களே இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். பிஎன் ஆட்சியை வீழ்த்துவதற்கான மக்கள் எழுச்சி தொடரும். அவர்கள் அம்னோ அச்சுறுத்தலுக்கு அடி பணிய மாட்டார்கள்.”

அந்தச் சம்பவத்தின் போது பிகேஆர் பிரச்சார பஸ்ஸின் முன் கண்ணாடியும் சிதறி விட்டதாகக் கூறப்பட்டது.

அந்த பிகேஆர் பிரச்சாரப் பஸ் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பது இது முதன் முறையல்ல. பேராக், ஜோகூர், கிளந்தான் உட்பட பல இடங்களில் அது பல முறை சேதப்படுத்தப்பட்டுள்ளது.

வன்முறை மூண்டதைத் தொடர்ந்து அமைதியை ஏற்படுத்த கலகத் தடுப்புப் போலீசார் கொண்டு வரப்பட்டனர். ஆனால் அவர்கள் தாக்குதல்காரர்களை கட்டுப்படுத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.

அந்தச் சம்பவம் குறித்து விளக்குவதற்காக இன்று காலை பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் நிருபர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பேராக் தெலுக் இந்தானில் இன்னொரு செராமாவுக்கும் பிஎன் ஆதரவாளர்கள் இடையூறு செய்துள்ளனர்.

டிஏபி ஏற்பாடு செய்திருந்த அந்த செராமாவுக்கு பிஎன் கொடிகளை வைத்திருந்த 40 பேர் அத்துமீறி நுழைந்து பக்காத்தான் தலைவர்கள் மீது அவதூறுகளை கூறிய பின்னர் அந்த இடத்திலிருந்து எம்பி மனோகரனை போலீசார் பத்திரமாக வெளியில் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

TAGS: