மிகவும் அரிதான ஒருமைப்பாட்டை காட்டும் வகையில் டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங், சபாவில் ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்கள் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ளதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அந்த விவகாரத்தைச் சமாளிப்பதற்கு அரசாங்கமும் பாதுகாப்புப் படைகளும் எடுத்துள்ள எல்லா தேவையான நடவடிக்கைகளுக்கும் இன, சமய, வட்டார, அரசியல் வேறுபாடின்றி அனைத்து மலேசியர்களும் முழு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என லிம் நேற்று விடுத்த அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.
“எட்டு போலீஸ் அதிகாரிகள் உயிரிழப்பதற்கு வழி வகுத்து விட்ட சுலு ஆயுதமேந்திய தீவிரவாதிகளின் ஒரு மாத கால படையெடுப்பை முறியடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மீது நியாயமான குறைபாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.’
“என்றாலும் அந்தக் குறைபாடுகளை வெளிப்படுத்துவதற்கு இது நேரமல்ல. நமது தேசிய இறையாண்மையை மீண்டும் நிலை நிறுத்தி பாதுகாப்புக்கு விடுக்கப்படுள்ள எல்லா மருட்டல்களை முறியடிக்கும் முக்கிய விஷயத்துடன் ஒப்பிடும் போது அவை இரண்டாம் பட்சமே,” என்றார் அவர்.
அதனைக் கருத்தில் கொண்டு எல்லா அரசியல் தலைவர்களும் நெருக்கடியான இந்த நேரத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை விடுப்பதை நிறுத்திக் கொண்டு தேசிய நலனுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.”
“சுலு தீவிரவாதிகளின் ஊடுருவல் தொடர்பில் பக்காத்தான் ராக்யாட் தலைவர்கள் மீது குறிப்பாக அன்வார் இப்ராஹிம் மீது பொறுப்பற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன,” என்றும் லிம் சொன்னார்.
சபா நிலவரம் தொடர்பில் அண்மையில் அவதூறான அறிக்கை விடுத்ததற்காக உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனின் உதவியாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதை தாம் தள்ளி வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மூன்றாவது சுல்தான் ஜமாலுல் கிராம் அறித்த தன்மூப்பான சண்டை நிறுத்தம் பற்றிக் குறிப்பிட்டு அதற்கு எந்த அடிப்படையும் இல்லை என லிம் குறிப்பிட்டார். ஏனெனில் அவருடைய ஆதரவாளர்கள் மலேசிய பாதுகாப்புப் படை வீரர்களைக் கொன்றுள்ளனர்.
தேசிய வீரர்கள் என உயிர்நீத்த போலீஸ்காரர்களை வருணித்த அவர், அந்தப் போலீஸ்காரர்களுடைய சடலங்களை ஊடுருவல்காரர்கள் சிதைத்துள்ளதையும் சுட்டிக் காட்டினார்.
ஊடுருவலைச் சமாளிக்க எடுக்கப்படும் எல்லா நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தெரிவிக்க நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு பக்காத்தான் விடுத்துள்ள வேண்டுகோளுக்குச் செவி சாய்க்குமாறும் லிம், நஜிப்பைக் கேட்டுக் கொண்டார்.