சைபுலின் தந்தை அன்வாரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறார்

saifulசைபுல் புஹாரி-யின் தந்தை பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுடன் குதப்புணர்ச்சி வழக்கு ll-ல் அன்வார் மீது அவதூறு சொல்வதற்குப் பிரதமரது அதிகாரி ஒருவர் உட்பட பொறுப்பற்ற தரப்புக்களினால் தமது புதல்வர் பயன்படுத்தப்பட்டாகவும் கூறிக் கொண்டுள்ளார்.

“அன்வார் நிரபராதி அவதூறுக்கு இலக்கானவர்… ஆகவே நான் அன்வாரிடமும் அவரது குடும்பத்தாரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.”

“அவரும் அவரது குடும்பத்தினரும் அந்த அவதூறு காரணமாக பல துயரங்களை அனுபவித்துள்ளனர்,” என அஸ்லான் லாஸிம் இன்று கோலாலம்பூரில் நிருபர்கள் சந்திப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

கோலாலம்பூர் ஆடம்பர அடுக்குமாடி வீடு ஒன்றில் 2008ம் ஆண்டு ஜுன் மாதம் 26ம் தேதி தமது அரசியல் உதவியாளரான சைபுலை குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து அன்வாரை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் விடுவித்தது.

அந்தத் தீர்ப்புக்கு எதிராக சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் முறையீடு செய்து கொண்டுள்ளது. அந்த வழக்கு ஜுலை 22ம் தேதி முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.