பிலிப்பீன்ஸ், மனிதாபிமானக் குழு ஒன்றை அனுப்பி சாபாவில் சண்டையில் ஈடுபட்டுள்ள பிலிப்பினோ ஊடுருவல்காரர்களின் நிலையைக் கண்டறிய மலேசியாவிடம் அனுமதி கேட்டுள்ளது.
சாபாவின் லாஹாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப் படைகளுக்கும் ஊடுருவல்காரர்களுக்குமிடையில் நடந்துள்ள சண்டைகளில் இதுவரை 52 பிலிப்பினோக்கள் கொல்லப்பட்டும் 10 பேர் கைதாகியும் இருப்பதாக மலேசியா அறிவித்துள்ளது. மலேசிய போலீஸ் அதிகாரிகள் எண்மரும் சண்டைகளில் உயிரிழந்தனர்.
“பிலிப்பினோக்களின் நிலையைக் கண்டறிய எங்கள் மனிதாபிமான குழுவுக்கு அனுமதி கேட்டிருக்கிறோம்”, என பிலிப்பீன்ஸ் வெளியுறவுத் துறை பேச்சாளர் ராவுல் ஹெர்னாண்டஸ் கூறினார். “கைதான பிலிப்பினோக்களைக் காணவும் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கவும் அவர்களுக்கு எப்படி உதலாம் என்பதைக் கண்டறியவும் விரும்புகிறோம்”.
இதற்காக பிலிப்பீன் கடற்படை கப்பல் ஒன்று மருத்துவர்கள், தாதியர் முதலானோருடன் தென் பிலிப்பீன்ஸ் மாநிலமான தாவி-தாவியில் புறப்படுவதற்கு ஆயத்தமாகக் காத்திருக்கிறது என்றாரவர்.
பிப்ரவரி 12-இல், சூலு சுல்தான் ஜமாலுல் கிராம் III-இன் ஆதரவாளர்கள், 200-க்கு மேற்பட்டோர், ஆயுதம் தாங்கியவர்களாக சாபாவுக்கு உரிமை கொண்டாடி லாஹாட் டத்துவில் வந்திறங்கியதை அடுத்து சாபா நெருக்கடி தோன்றியது.
நேற்று சுல்தான் தன்மூப்பாக போர்நிறுத்தம் ஒன்றை அறிவித்தார். ஆனால், மலேசியப் பிரதமர், நஜிப் அப்துல் ரசாக் அது போதாது என்று ஒதுக்கித் தள்ளினார். பிலிப்பினோ ஊடுருவல்காரர்கள் “நிபந்தனையின்றி ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடையும் வரை” தாக்குதல் தொடரும் என்றவர் எச்சரித்தார்.