செயல்திட்டத்துக்கு பக்காத்தானின் முழு உத்தரவாதம் தேவை: இண்ட்ராப் வலியுறுத்து

hindraf

இந்தியர்களின் மனக்குறைகள் பக்காத்தான் ரக்யாட்டின் தேர்தல்கொள்கை அறிக்கையில் சேர்த்துக்கொள்ளப்படும் என்று அன்வார் இப்ராகிம் என்னதான்  உறுதிமொழி அளித்திருந்தாலும் அதுஇண்ட்ராப்புக்கு அவ்வளவாக உற்சாகம் அளிக்கவில்லை.

மாற்றரசுக் கட்சித் தலைவரை “விடுபட்டதை ஒப்புக்கொண்ட துணிச்சலுக்காக பாராட்டலாம்” என்று கூறிய இண்ட்ராப் ஆலோசகர் என். கணேசன்,  ஆனாலும் அவரது வாக்குறுதி“இந்திய வாக்காளர்களைச் சாந்தப்படுத்தும் முயற்சி, அவ்வளவுதான்”  என்றார்.

“இந்திய ஏழைகளின் முன்னேற்றத்துக்கான இண்ட்ராபின் ஐந்தாண்டு செயல் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டதில் ஒரு சிறுபகுதி கூட ஆகக் கடைசியாக கூறப்பட்டுள்ள பக்காத்தான் தேர்தல் வாக்குறுதிகளில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

“அந்த வகையில் அவ்வாக்குறுதிகள் முழுமையாக இல்லை, அவை இந்திய ஏழைகளின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப் போவதில்லை”, என்று கணேசன் நேற்று ஓர் அறிக்கையில் கூறினார்.

hindraf1வாக்குகள் பெறும் நோக்கில் பக்காத்தான் அதன் தேர்தல் கொள்கைஅறிக்கையில் சிலவற்றை “வலிய-சேர்த்துக்கொண்டிருக்கிறது”, என்றவர் குற்றம் சுமத்தினார்.

இண்ட்ராப், இந்திய மலேசியர் எதிர்நோக்கும் சமூக-பொருளாதாரப் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு கொண்டுவரும் ஒரு விரிவான திட்டத்தைக் காண விரும்புகிறது.

“எங்கள் ஐந்தாண்டு செயல்திட்டத்தை ஏற்பதாக உத்தரவாதம் அளியுங்கள். எங்கள் முழு ஒத்துழைப்பும் உங்களுக்கே”, என்றவர் பிரகடனம் செய்தார்.

ஏற்பதாக உத்தரவாதம் தேவை

இருதரப்பு அரசியல் கட்சிகளுமே தேர்தலுக்குமுன் வாக்குறுதிகளைக் கொடுப்பார்கள். ஆனால், அதன்பின் அவற்றை நிறைவேற்றுவதில்லை. கடந்த கால அனுபவங்கள் இதற்குச் சான்று எனப் பகர்ந்த கணேசன், அதனால்தான் இண்ட்ராப் ஓர் உத்தரவாதத்தைக் கோருகிறது என விளக்கினார்.

2008-இல் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என சிலாங்கூர் அரசின்மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கை அவர் சுட்டிக்காட்டினார்.

அன்வார் நேற்று, பக்காத்தானின் ‘மக்கள் தேர்தல் கொள்கைஅறிக்கையில்’ இந்தியர்களின் மனக்குறைகளும் சேர்த்துக்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்தார்.

நாடற்ற மக்கள் விவகாரம், கூடுதல் வேலை வாய்ப்பு, தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாடு, முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்குக் கட்டுப்படியான விலையில் வீடுகள் கட்டித் தரல் போன்றவை பக்காத்தானின் தேவைகளின் அடிப்படையில் அமைந்த கொள்கைகளிலேயே அடங்கி விடுகின்றன என்று குறிப்பிட்ட அன்வார், அது தவிர குறிப்பிட்ட சில மனக்குறைகளும்  அதில் விவரமாகக் குறிப்பிடப்படும் என்றார்.

கணேசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தேர்தலில் போட்டியிட இடம்கேட்டு இண்ட்ராப் முன்பு விடுத்திருந்த கோரிக்கை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.

இண்ட்ராப், மாற்றரசுக் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டுமானால், பொதுத் தேர்தலில் போட்டியிட ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளும் 10 சட்டமன்றத் தொகுதிகளும் கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்ததாக கடந்த மாதம் மலேசியாகினி செய்தி வெளியிட்டிருந்தது.

அது பற்றி பின்னர் விளக்கமளித்த இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, மஇகா போட்டியிடும் இடங்களில் எல்லாம் அதை எதிர்த்து இண்ட்ராப் போட்டியிட விரும்புகிறது என்றார்.

TAGS: