மேலும் ஒரு ஊடுருவல்காரர் சுட்டுக்கொல்லப்பட்டார்

1intrude

லாஹாட் டத்துவில், பாதுகாப்பு வளையத்தைத் தாண்ட முயன்ற மேலும் ஒரு ஊடுருவல்காரரைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றதாக போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் கூறினார்.

“காலை ஆறு மணிக்கு ஊடுருவல்காரர்களில் ஒருவர் தஞ்சோங் பத்துவில் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி தப்பிச் செல்ல முயன்றார்.

1intrude1“அப்போது பாதுகாப்புப் படைகளுக்கும் அவருக்குமிடையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் (சுமார் 8 மணிக்கு) அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்”, என பெல்டா சஹாபாட்டில் இன்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இஸ்மாயில் கூறினார்.

இதைச் சேர்த்து பிப்ரவரி 12 இந்நெருக்கடி தோன்றியதிலிருந்து இதுவரை 53 ஊடுருவல்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

தவிர, சாபா முழுவதிலும் ஊடுருவலுக்கு ஆதரவானவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் மூவர் கம்போங் தண்டுவோவிலிருந்து பாதுகாப்புப் படைகளின் முற்றுகையைத் தாண்டித் தப்பிச் செல்ல முயன்றவர்கள், மற்றவர்கள் பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கை பகுதிக்கு அப்பால் உள்ள இடங்களில் கைது செய்யப்பட்டவர்கள்.

எதிரிகள் பாதுகாப்புப் படையினர் எவரையும் பிடித்து வைத்திருக்கவில்லை, அதனால்தான் கைதிகளைப் பரிமாறிக்கொள்ளலாம் என்று அவர்கள் கூறியது தமக்குக் குழப்பத்தை உண்டுபண்ணுவதாக இஸ்மாயில் கூறினார்.

இப்போது கம்போங் தண்டுவோ, தஞ்சோங் பத்து ஆகியவற்றை உள்ளடக்கிய ஏழு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

“நம் பாதுகாப்பு வளையம் இப்போது சுருங்கிக் கொண்டே வருகிறது”, என்று இஸ்மாயில் குறிப்பிட்டார்.

தப்ப வழியில்லை 

ஆயுதப் படைகளின் தலைவர் சுல்கிப்ளி முகம்மட் ஸின், ஊடுருவல்காரர்கள் பாதுகாப்பு வளையத்தைத் தகர்த்துகொண்டு தப்ப வழியில்லை என்றார்.

“அவர்களின் செயல்பாட்டைப் பார்க்கையில் அவர்கள் கம்போங் தண்டுவோவிலும் கம்போங் தஞ்சோங் பத்துவிலும் சிக்கிக்கொண்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இரு கிராமங்களுக்கு இடையில் பாதுகாப்பு வளையத்தை இறுக்கி வருகிறோம்”, என்றாரவர்.

கடலுக்குச் செல்லும் வழியும் முழுக்க அடைபட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.