சதித் திட்டம் எனக் கூறப்படுவதை பிலிப்பின்ஸ் விசாரிக்கும்

presidentசபாவில் சுலு சுல்தான் ஊடுருவலுக்குப் பின்னணியில் சதித் திட்டம் இருக்கலாம் எனக் கூறப்படுவதை விசாரிக்கப் போவதாக பிலிப்பின்ஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அந்த வன்முறைக்கான காரணத்தை ஆய்வு செய்ய சதித் திட்டம் பற்றி புலனாய்வு செய்யப்படும் என அந்த நாட்டின் துணை அதிபர் அலுவலகப் பேச்சாளர் சொன்னார்.

சபாவில் உருவாகியுள்ள நெருக்கடியைத் தீர்க்க முயலும் போது அந்த விசாரணையும் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

பகைமை நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஐநா தலைமைச் செயலாளர் பான் கீ மூன் விடுத்த வேண்டுகோளுக்கு ஏற்பவும் அந்த நடவடிக்கை அமையும் என்றும் PhilStar என்ற செய்தி இணையத் தளத்திடம் அவர் கூறினார்.

இதனிடையே சபா ஊடுருவலுக்கு சுலு சுல்தான் எப்படி நிதியளிக்க முடிந்தது என்பதையும் அதிபர் அலுவலகம் விசாரித்துள்ளதாகவும் PhilStar குறிப்பிட்டது. சுலு சுல்தானுடைய ஆதரவாளர்களுக்கு 600 அமெரிக்க டாலர் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.