‘சிவப்பு பகுதியில்’ நிருபர்கள் துப்பாக்கிக்காரனைக் கண்டனர்

gunபாதுகாப்புப் படையினர் ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்களை வேட்டையாடி வரும் ‘சிவப்பு பகுதியில்’ உள்ள தஞ்சோங் லாபியான் கிராமத்துக்குள் இன்று காலை நுழைந்த நிருபர்கள் துப்பாக்கிக்காரன் ஒருவனைக் கண்டார்கள்

அந்தக் கிராமத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த போலீஸ் சாலைத் தடுப்பில் யாரும் இல்லாததால் அந்தப் பகுதி பாதுகாப்பாக உள்ளது என எண்ணி நிருபர்கள் அங்கு சென்றனர்.

“அங்கு காவலர்கள் இல்லை. அத்துடன் கிராம மக்களும் மோட்டார் சைக்கிளில் வந்து போய்க் கொண்டிருந்தனர். நாங்கள் பாதுகாப்பானது என எண்ணி உள்ளே நுழைந்தோம்,” என ஸ்டார் படப் பிடிப்பாளர் Normiemie Duin கூறினார்.

கிராமத்துக்குள் சென்றதும் இரண்டு வாகனங்களும் பிரிக்கப்பட்டன. அப்போது திடீரென கறுப்பு நிற உடை அணிந்திருந்த ஒருவர் கையில் துப்பாக்கியுடன் செம்பனை மரம் ஒன்றுக்குப் பின்னால் மறைந்திருந்ததை Normiemie பார்த்து விட்டார்.

“என் கேமிராவை அவர் ஆயுதம் என எண்ணி விடக் கூடாது என்பதற்காக நான் உடனடியாக அதனைக் கீழே வைத்து விட்டேன்.”

அடுத்து அந்தத் துப்பாக்கிகாரனும் தரையில் படுத்து விட்டதை அவர் கண்டார். அதிர்ச்சி அடைந்த ஒட்டுநரும் அல் ஹிஜ்ரா நிருபருமான Senieffa Mushtadfa Albakry உடனடியாக வாகனத்தை வேகமாகத் திருப்பி விட்டார்.”

“அருகில் படம் பிடித்துக் கொண்டிருந்த என் நண்பர்களுக்கு தகவல் கொடுக்க நான் வாகன ஒலியை தொடர்ந்து எழுப்பினேன். அவர்களும் செய்தியை உணர்ந்து கொண்டு அங்கிருந்து வெளியேறி விட்டனர்,” என்றும் Normiemie சொன்னார்.

தஞ்சோங் லாபியானுக்கு மக்கள் திரும்பி விட்டனர்

அந்தத் துப்பாக்கிகாரன் போலீஸ் அதிகாரி அல்ல என்பது தமக்கு நிச்சயமாகத் தெரியும் என அவர் குறிப்பிட்டார்.

“அவர் போலீஸ்காரராக இருந்தால் எங்களை நிறுத்தியிருப்பார். ஆனால் அவர் அதற்குப் பதில் பதுங்கி விட்டார்.”

அந்த நேரத்தில் எந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தையும் தாங்கள் செவிமடுக்கவில்லை என Normiemieயும் Senieffa-யும் கூறினர். ஆனால் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறிய சில கிராமவாசிகள் தாங்கள் இன்று காலையில் நான்கு முறை துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களைக் கேட்டதாகத் தெரிவித்தனர்.

நிவாரண மய்யங்களிலிருந்து தஞ்சோங் லாபியானுக்கு மக்கள் திரும்பி விட்டனரா அல்லது அவர்கள் வெளியேற மறுத்து அங்கு எல்லா நேரமும் இருந்தனரா என்பதும் தெரியவில்லை.

தஞ்சோங் லாபியான் தஞ்சோங் பத்துவுக்கு அருகில் அமைந்துள்ளது. பாதுகாப்புப் படைகளுக்கும் ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்களுக்கும் இடையில் அங்கு கடும் சண்டை நிகழ்ந்துள்ளது.