தியான் சுவா கட்டுரை மீது போலீசார் பிகேஆர் ஏட்டிடம் விசாரித்தனர்

tianலஹாட் டத்து பூசல் மீது பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா தெரிவித்த கருத்துக்கள் சம்பந்தப்பட்ட கட்டுரை ஒன்றின் மீது போலீசார் இன்று பிகேஆர் ஏடான Keadilan Daily-யின் ஆசிரியரையும் நிருபரையும் விசாரித்தனர்.

பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமையகத்தில் அந்த ஏட்டின் ஆசிரியர் பாஸால்லா பிட்-டும் நிருபரான ஆயிஷா ஜியோபிரே-யும் தங்கள் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். அப்போது அவர்களது வழக்குரைஞரான எரிக் பால்செனும் உடனிருந்தார்.

‘Insiden tembakan di Lahad Datu konsporasi terancang Umno’ ( லஹாட் டத்துவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமும் அம்னோ சதியும்) என்னும் தலைப்பில் வெளியான கட்டுரை மீது அவர்கள் விசாரிக்கப்பட்டனர்.

அந்த விவரங்களை மலேசியாகினி தொடர்பு கொண்ட போது பாஸால்லா பிட் வெளியிட்டார்.

லஹாட் டத்து பிரச்னை மீது பழி போடப்படுவதற்கு எதிராக அம்னோ ஊடகங்கள் செய்திகளைப் பெரிதாக போடும் வேளையில் அந்தச் சம்பவம் தொடர்பில் செய்தி ஏதும் வெளியிடப்படாதது குறித்தும் அந்த ஊடுருவலுக்கு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் மீது பழி போடுவதற்கான சதித் திட்டம் குறித்தும் மட்டுமே தாம் பேசியதாக தியான் சுவா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

பிப்ரவரி 12ம் தேதி தொடங்கிய லஹாட் டத்து நெருக்கடி அருகில் உள்ள கிராமங்களுக்கும் பரவியது. அதில் எட்டு போலீஸ்காரர்களும் 53 எதிரிகளும் கொல்லப்பட்டனர். மேலும் மூவர் சிறைப் பிடிக்கப்பட்டனர்.