சிலாங்கூர் மாநிலத்தில் மலாய்க்காரர்கள், பூமிபுத்ராக்கள் ஆகியோருடைய உரிமைகளும் நிலையும் நிலைத்திருப்பதற்கு அந்த மாநிலம் எதிர்க்கட்சிகளிடமிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறிக் கொண்டுள்ளார்.
சிலாங்கூரில் பொருளாதாரத்தை தங்கள் கட்டுக்குள் எடுத்துக் கொண்ட எதிர்த்தரப்புக் கூட்டணி அந்த மாநிலத்தில் அரசியலையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் பேராசையைக் கொண்டுள்ளது என அவர் சொன்னார்.
“இதற்கு முன்னதாக சிலாங்கூர் பிஎன் ஆட்சியில் இருந்த போது பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருந்ததை நாம் பார்த்தோம். மலாய்க்காரர்களுக்கும் பூமிபுத்ராக்களுக்கும் ஒர் இடம் இருந்தது. அதனால் நாம் முன்னைக் காட்டிலும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தோம்.”
“எதிர்த்தரப்பு வெற்றி பெற்று சிலாங்கூரை நிர்வாகம் செய்யுமானால் மலாய்க்காரர்கள், பூமிபுத்ராக்கள் ஆகியோருடைய நிலை ஒதுக்கப்பட்டு விடும். அதனால் நாம் எதிர்க்கட்சி அரசாங்கத்தை வீழ்த்தி அம்னோ வழி நடத்தும் பிஎன் அரசாங்கத்தை அமைப்பது அவசியம் என நாம் விரைவாக மக்களுக்கு உணர்த்த வேண்டும்.”
“சிலாங்கூர் காப்பாற்றப்படா விட்டால் நமது தியாகங்கள் விரயமாகி விடும்,” என சிலாங்கூர் பெர்க்காசா ‘சிலாங்கூரைக் காப்பாற்றுங்கள்’ என்னும் கருப் பொருளில் ஏற்பாடு செய்த வாகன அணி ஒன்றை ஷா அலாமில் நேற்று முடித்து வைத்துப் பேசிய போது மகாதீர் கூறினார்.
அந்த நிகழ்வில் அவரது துணைவியார் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமட் அலி, பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி, சிலாங்கூர் பெர்க்காசா தலைவர் அபு பாக்கார் யாஹ்யா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
அந்த வாகன அணியில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். அவர்களுடைய மோட்டார் சைக்கிள் அணி காலை பத்து மணி தொடக்கம் யூஎஸ்ஜே, சுபாங் ஜெயா,கிள்ளான் ஆகியவற்றுக்குச் சென்றது.
எதிர்த்தரப்பில் உள்ள இரண்டு மலாய்க் கட்சிகளும் பலவீனமாக இருப்பதால் மலாய் இனத்துக்கு மரியாதை குறைந்துள்ளது என்றும் அதனால் மலாய்க்காரர்கள், பூமிபுத்ராக்கள் ஆகியோருடைய சிறப்புச் சலுகைகள் பறி போகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் டாக்டர் மகாதீர் சொன்னார்.
“நமது நாட்டின் அதிகாரத்துவ மொழி பாஹாசா மிலாயு என்பதையும் இஸ்லாம் அதிகாரத்துவ சமயம் என்பதையும் நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம். நாம் அவர்களுடைய உரிமைகளை மதிப்பது போல அவர்களும் நமது உரிமைகளை மதிக்க வேண்டும்.”
“ஆனால் எதிர்த்தரப்புக் கூட்டணியில் மலாய்க்காரர்களுடைய தலைமைத்துவம் மிகவும் பலவீனமாக இருப்பதால் பைபிளில் அல்லாஹ் என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு நெருக்கப்பட்டது உட்பட அவை தங்கள் சகாக்களை அப்படியே பின்பற்றுகின்றன.”
மலாய்க்காரர்களுடைய சிறப்பு உரிமைகள் அகற்றப்பட வேண்டும் என யோசனை கூறப்படும் போது மலாய் தலைமைத்துவத்தைக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் இரண்டு கட்சிகளும் ஏற்றுக் கொண்டன,” என்றும் மகாதீர் குறிப்பிட்டார்.
“நாம் கவனமாக இல்லா விட்டால் நமது சொந்த மண்ணில் நமது உரிமைகளை நாம் முழுமையாக இழந்து விடுவோம். மலாய்க்காரர்கள், பூமிபுத்ராக்கள் ஆகியோரை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் எல்லா முயற்சிகளையும் எதிர்க்கட்சிகள் குலைத்து விடுவர்.”
-பெர்னாமா