பயத்தின் காரணமாக மாணவர்களில் பாதிப்பேர்தான் பள்ளி செல்கிறார்கள்

1schoo;சாபாவில் சூலு இராணுவம் என்று கூறிக்கொள்வோரின் ஊடுருவலை அடுத்து தேசா கெஞ்சானா பெல்டாவில் ஒரு வாரமாக மூடிக்கிடந்த பள்ளிக்கூடங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டபோது மாணவர்களில் பாதிப்பேர்தான் வகுப்புகளுக்கு வந்திருந்தனர்.

எஸ்எம்கே தேசா கெஞ்சானாவில், எல்லா வகுப்புகளும் பாதித்தான் நிரம்பி இருந்தன. ஊடுருவலை எண்ணிப் பெற்றோரும் மாணவரும் அச்சம் கொண்டிருப்பதுதான் இதற்குக் காரணமாகும்.

“அவர்கள் பயப்படுகிறார்கள் போலும். பெற்றோர்கள் அதிர்ச்சியிலிருது இன்னும் மீளவில்லை, அதனால்தான் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பத் தயங்குகிறார்கள்”, என்று அப்பள்ளி முதல்வர் ஜம்ரி பெஹாகான் மலேசியாகினியிடம் தெரிவித்தார். அப்பள்ளியில் 1,883 மாணவர்கள் பயில்வதாக அவர் சொன்னார்.

1school1மாணவர்களில் பலர் இன்னமும் எம்பாரா பூடி துயர்துடைப்பு மையத்தில் உள்ளனர். அதுவும் அவர்கள் வர முடியாமல் போனதற்கு ஒரு காரணமாகும் என்றாரவர்.

தேசா கெஞ்சானா, பாதுகாப்புப் படைகளுக்கும் பிலிப்பினோ ஊடுருவல்காரர்களுக்குமிடையே சண்டை நிகழ்ந்த கம்போங் தண்டுவோ, தஞ்சோங் பத்து ஆகியவற்றிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

லாஹாட் டத்துவிலும் சம்பூர்னாவிலும் உள்ள 57 பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படும் எனக் கல்வி துணை அமைச்சர் முகம்மட் புவாட் ஜர்காஷி,  மூன்று நாள்களுக்கு முன் அறிவித்திருந்தார்.

சில ஆசிரியர்களும்கூட இன்னமும் பள்ளிக்கு வந்துசேரவில்லை என்று ஜம்ரி தெரிவித்தார். ஆசிரியர்களில் சிலர் சாபாவின் மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்க்ள். சிலர் தீவகற்ப மலேசியாவைச் சேர்ந்தவர்கள்.

“மூடப்பட்ட பள்ளிகள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பதை அவர்கள் அறியாதிருக்கலாம். மூன்று நாள்களுக்கு முன்னால்தான் அவர்களுக்க்குத் தெரியப்படுத்தப்பட்டது. சிலர் திரும்பி வந்திருக்கிறார்கள். மற்றவர்கள்,  விமானப் பயணத்துக்காகக் காத்திருக்கலாம்”, என்றார்.

1school2எஸ்எம்கே தேசா கெஞ்சானாவில் ஐந்தாம் படிவ மாணவி மூஃபா முலுட்லான் (இடம்), எதிர்பாராமல் ஒரு வாரம் பள்ளி மூடப்பட்டதை எண்ணி வருத்தப்பட்டார்.

அந்த நேரத்தில் வீட்டிலேயே பாடநூல்களைப் படித்தார். ஊடுருவல் நிலவரத்தைத் தெரிந்துகொள்ள அவ்வப்போது தொலைக்காட்சியையும் பார்ப்பார்.

“பாதுகாப்புப் படைகள் எங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை உண்டு; அதனால் இப்போது எனக்குப் பயமில்லை”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.