எதிரிகளுடைய சுரங்கப் பாதைகள் ஏதும் கண்டு பிடிக்கப்படவில்லை

troopsதெற்கு பிலிப்பின்ஸிலிருந்து ஊடுருவல்காரர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் நிர்மாணிக்கப்பட சுரங்கப் பாதை ஒன்றின் வழியாக கம்போங் தண்டுவோ-வுக்குள் நுழைந்ததாக அந்தக் கிராம மக்கள் சொல்வதை சபா போலீஸ் ஆணையாளர் ஹம்சா தாயிப் மறுத்துள்ளார்.

“அத்தகைய சுரங்கப் பாதை ஏதும் இருப்பதாக எங்களுக்கு இது வரை தகவல் இல்லை,” என அவர்   சொன்னார்.

“உண்மையில் இராணுவம் ஆகாயத் தாக்குதல்களை மேற்கொண்ட போது நாங்கள் நிலவறை சுரங்கப் பாதை எதனையும் காணவில்லை. நாங்கள் அழிக்கப்பட்ட பல கார்களையே பார்த்தோம்,” என அவர் டிவி3-வில் ஒளிபரப்பான ‘Malaysia Hari Ini’ (MHI) நிகழ்ச்சி வழி தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.

கம்போங் தண்டுவோ-வுக்குள் நுழைவதற்கு முன்னர் சுலு ஊடுருவல்காரர்கள் சுரங்கப் பாதையை நிர்மாணித்தது உட்பட விவரமாகத் திட்டமிட்டிருந்ததாக அந்தக் கிராமவாசி ஒருவர் சொன்னதாக உள்ளூர் நாளேடு ஒன்றில் வெளியான செய்தி பற்றி ஹம்சா தாயிப் கருத்துரைத்தார்.

தாங்கள் தங்கத்தைத் தேடுவது போல ஊடுருவல்காரர்கள் மண் தோண்டும் எந்திரங்களைப் பயன்படுத்தி குழிகளை ஏற்படுத்தியதாக அந்தக் கிராமவாசிகள் கூறிக் கொண்டனர். அவர்கள் உண்மையில் தாக்கப்படும் போது மறைந்து கொள்வதற்காக அரண்களையும் சுரங்கப் பாதைகளையும் அமைத்துக் கொண்டிருந்ததாக கிராமவாசிகள் மேலும் கூறினார்troops1

சுலு ஊடுருவல்காரர்கள் கம்போங் தண்டுவோ, கம்போங் தஞ்சோங் பத்து ஆகியவற்றில் மட்டும் தான் மறைந்திருந்தனரா என்ற கேள்விக்குப் பதில் அளித்த ஹம்சா,” ஊடுருவல்காரர்கள் அந்த இரு கிராமங்களில் மட்டும் தான் இருந்தனர் என நாம் கருத முடியாது,” என்றார்.

நேற்று கம்போங் சுங்கை பிலிஸ்-ஸில் நேற்று ஊடுருவல்காரர்களைத் தேடும் நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படையினர் சுட்டதில் ஒரு சிறுவன் கொல்லப்பட்டு ஆடவர் ஒருவர் காயமடைந்த சம்பவம் பற்றிக் கருத்துரைத்த அவர், அந்தச் சம்பவம் நடவடிக்கைப் பகுதியில் நிகழ்ந்ததாகச் சொன்னார்.

நடவடிக்கைப் பகுதியில் இயங்கும் போது பாதுகாப்புப் படையினர் எப்போதும் தயார் நிலையில் இருப்பார்கள் என்பதையும் எதிரி பதில் தாக்குதலைத் தொடுப்பதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

“எந்த சூழ்நிலையிலும் நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்போம். அதனால் தான் நடவடிக்கைப் பகுதிக்கு அருகில் செல்ல வேண்டாம் என பொது மக்களுக்குப் பாதுகாப்புப் படைகள் எப்போதும் நினைவூட்டி வருகின்றன,” என அவர் மேலும் சொன்னார்.

பெர்னாமா