ஹரப்பான் கம்யூனிட்டி சுல்தானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது

விருந்து நிகழ்வு ஒன்றில் ஜயிஸ் எனப்படும் இஸ்லாமிய விவகாரத் துறை சோதனைகள் நடத்திய இரண்டு மாதங்களுக்கு பின்னர் சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா விடுத்த அறிக்கைக்கு அந்த விருந்தை ஏற்பாடு செய்த ஹரப்பான் கம்யூனிட்டி அமைப்பின்  வழக்குரைஞர் அன்னி சேவியர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

“நாங்கள் அந்த அறிக்கைக்காக மேன்மை தங்கிய சுல்தானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எல்லாத் தரப்புக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சரியான நேரத்தில் அது வெளியிடப்பட்டுள்ளது”, என அவர் தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.

அந்தச் சோதனை சட்டப்பூர்வமானது என சுல்தான் குறிப்பிட்டுள்ளதை ஒப்புக் கொண்ட அவர், ஜயிஸ் தனது புலனாய்வை தொழில் ரீதியாக இன்னும் நல்ல முறையில் செய்திருக்கலாம் என்றார் அவர்.

“ஜயிஸ் போன்ற இஸ்லாமிய அமைப்புக்கள் தங்களது புலனாய்வை தொழில் ரீதியாக மேற்கொள்ள வேண்டும். இறுதி அறிக்கை வெளியாவதற்கு முன்னர் புலனாய்வு தொடரும் போது, அதன் தொடக்க அறிக்கை ரகசியமாக வலைப்பதிவாளர்களிடம் கசிந்து, அவர்கள் அந்த அரசு சாரா அமைப்பான ஹரப்பான் கம்யூனிட்டி குறித்து ஐயப்பாடுகளை கிளப்பியதுடன் அதன் மீது விசாரணையும் நடத்தியுள்ளனர்.”

ஒருவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படும் வரையில் அவர் நிரபராதி என்னும் கோட்பாட்டை எல்லாத் தரப்புக்களும் நிலை நிறுத்த வேண்டும் என அன்னு கேட்டுக் கொண்டார்.

கடந்த ஆகஸ்ட் மூன்றாம் தேதி டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில் நடைபெற்ற விருந்தில் ஜயிஸ் சோதனை நடத்திய பின்னர் ஹரப்பான் கம்யூனிட்டி மீது கவனம் அதிகரித்தது.

அந்த நிகழ்வில் முஸ்லிம்கள் மதம் மாற்றம் செய்யப்படுவதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஜயிஸ் கூறிக் கொண்டது,.

ஆனால் அந்தக் குற்றச்சாட்டை மறுத்த ஹரப்பான் கம்யூனிட்டி, ஏய்ட்ஸ்/எச்ஐவி நோயாளிகளுக்கு உதவி செய்வதற்கு நிதி திரட்டும் பொருட்டு அந்த விருந்து நடத்தப்பட்டதாக தெரிவித்தது.

அதற்கு பின்னர் புலனாய்வு தொடங்கப்பட்டது. ஆனால் ஜயிஸின் தொடக்க அறிக்கையும் நிகழ்வின் நிகழ்ச்சி நிரல் படங்கள் போன்ற பறிமுதல் செய்யப்பட்ட ஆதாரங்களும் அம்னோ ஆதரவு வலைப்பதிவுகளில் கசிந்து விட்டன.

TAGS: