செம்பூர்னாவில் ஆறு சந்தேகப் பேர்வழிகள் கைது

1sabah

செம்பூர்னா, கம்போங் பங்காவ்-பங்காவ்-இல் போலீஸ் மேற்கொண்ட ஒரு நடவடிக்கையில், தென் பிலிப்பீன்ஸைச் சேர்ந்த சூலு பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் அறுவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் போலீசாரால் மிகவும் தேடப்படும் ஒரு நபராவார்.

வாட் 69 மின்னல் படையினரும் பொது நடவடிக்கை படையினரும் சந்தேகப் பேர்வழிகள் பதுங்கியிருந்ததாகக் கூறப்பட்ட ஒரு வீட்டின்மீது அதிரடிச் சோதனை நடத்தியதாக செம்பூர்னா போலீஸ் தலைவர் முகம்மட் பிர்டுஸ் பிரான்சிஸ் அப்துல்லா கூறினார்.

“பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததும் காலை மணி ஆறுக்கு நடவடிக்கையைத் தொடங்கினோம்.

“அவர்கள் பயங்கரவாதிகளா என்பதைக் கண்டறிய அவர்களை விசாரணை செய்வோம்”, என்றுரைத்த அவர் அதிரடிச் சோதனையின்போது ஆயுதங்களோ தொலைத்தொடர்புக் கருவிகளோ கிடைக்கவில்லை என்றார்.

அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிய போலீஸ் முயன்று வருவதாக முகம்மட் பிர்டுஸ் கூறினார்.

பெர்னாமா, சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று விசாரித்ததில் அந்த அறுவரையும் அதற்குமுன் அங்கு கண்டதே இல்லை என்று கிராமவாசிகள் கூறினர்.

-பெர்னாமா