இன்று காலை லாஹாட் டத்துவில் சுங்கை ஞாமோக்கில் பாதுகாப்புப் படைகளுக்கும் ‘சூலு அரச இராணுவம்’ எனச் சுய-பிரகடனம் செய்துகொண்டிருக்கும் ஆயுதம்தாங்கிய கும்பலுக்குமிடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஆயுதப்படை வீரர் ஒருவர் பலியானார்.
பாதுகாப்புப் படையினர், தஞ்சோங் பத்து-க்கு அருகில் சுங்கை ஞாமோக்கைச் சுற்றிலும் துடைத்தொழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது காலை மணி 7.45க்கு ஊடுருவல்காரர்கள் ஐவரைக் கண்டதாக ஆயுதப்படைத் தலைவர் ஜெனரல் சுல்கிப்ளி முகம்மட் சைன் கூறினார்.
பாதுகாப்புப்படையினர் சுட்டதும் அவர்கள் சுங்கை ஞாமோக்கின் மேற்பகுதியை நோக்கிப் பின்வாங்கி ஓடியதாகவும் பாதுகாப்புப் படையினர் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றதாகவும் சுல்கிப்ளி (இடம்) கூறினார்.
“காலை மணி 10.45 அளவில் இரு தரப்பினருக்குமிடையில் மீண்டும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. “அதில் பாதுகாப்புப் படையினர் மூன்று பயங்கரவாதிகளைச் சுட்டுக்கொன்றனர். ஆனால், அவப்பேறாக பாதுகாப்புப் படை வீரர்களில் ஒருவரும் கொல்லப்பட்டார்”, என்று சுல்கிப்ளி இன்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
மார்ச் 5-இல், ஒப்ஸ் டவுலாட் தொடங்கிய பின்னர் மலேசியப் பாதுகாப்புப் படைகளுக்கு ஏற்பட்ட முதல் உயிர்ச்சேதம் இதுவாகும்.