பிஎன் 160 நாடாளுமன்ற இடங்களை வெல்லும்: அஹ்மட் மஸ்லான் கூறுகிறார்

பாரிசான் நேசனல்(பிஎன்), எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலில் 160 நாடாளுமன்ற இடங்களை வென்று மீண்டும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற நம்பிக்கை கொண்டிருக்கிறது.

இதனைத் தெரிவித்த பிரதமர்துறை அமைச்சர் அஹ்மட் மஸ்லான், 2008 பொதுத் தேர்தலில் மாற்றரசுக் கட்சிகளிடம் இழந்த மாநிலங்களைத் திரும்பக் கைப்பற்றும் ஆற்றலும் அதற்குண்டு என்றார்.

“கைவசமுள்ள 140 இடங்களைத் தக்க வைத்துக்கொள்வதுடன் பாஸிடமுள்ள 20 இடங்களில் ஐந்தையும் பிகேஆரின் 31 இடங்களில் பத்தையும் டிஏபியிடமிருந்து ஐந்து இடங்களையும் பிஎன் கைப்பற்றும்.

“140 இடங்களுடன் இந்த இருபதையும் சேர்த்து 160 இடங்கள் எங்கள் வசமிருக்கும்.  இது, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைவிட அதிகமாகும்”.  இன்று ஜோகூர் பாருவில் டேவான் டான்ஸ்ரீ முகம்மட் ரஹ்மாட்டில் அவர் ஜோகூர் பிஎன் தகவல் இயந்திரத்தைத் தொடக்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

2008-இல் மாற்றரசுக்கட்சிக்குச் சாதகமாக இருந்ததைப் போன்ற அரசியல் சூழல் இன்றில்லை என அம்னோ தகவல் தலைவருமான அஹ்மட் கூறினார்.

“2008-இல் அரசியல் சுனாமி நிகழ்ந்தது. அது நின்று,  பிஎன் இழந்த இடங்களைத் திரும்பப் பெறும்”.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், 1மலேசியா கொள்கையின்கீழ் மக்களுக்கு உதவும் திட்டங்களைக் கொண்டுவந்து அரசியல் சுனாமியைத் தடுத்து நிறுத்திவிட்டதாக அவர் சொன்னார்.

மாற்றரசுக் கட்சியிடமுள்ள மாநிலங்களில் கெடாவைக் கைப்பற்ற பிஎன் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது.  அதை அடுத்து சிலாங்கூர், கிளந்தான், பினாங்கு ஆகியவையும் விழலாம் என்றாரவர்.

2008-இல் இருந்ததைவிட சீனர்களின் ஆதரவு பிஎன்னுக்குக் கூடியிருக்கிறது. சீனர் சமூகம் பொருளாதாரத்திலும், தொழில் வாய்ப்புகளிலும் அரசியல் நிலைத்தன்மையிலும் அக்கறை கொண்ட ஒரு சமூகம்.

பிஎன், பொருளாதாரத்தை நல்ல முறையில் நிர்வகித்து வந்துள்ளதையும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கி இருப்பதையும் அரசியல் நிலைத்தன்மை குலைந்துவிடாமல் பாதுகாத்து வந்துள்ளதையும் சீனர்கள் உணர்கிறார்கள்.

“எனவே, அவர்களின் கண்ணோட்டம் எதிர்வரும் தேர்தலில் வேறு மாதிரியாக இருப்பது உறுதி”, என்றவர் கூறினார்.

TAGS: