நாய்களுக்கு தொலைக்காட்சி சனல், இஸ்ரேலில் அறிமுகம்

dog channelஜெருசலேம்: இஸ்ரேல் நாட்டில், வளர்ப்பு நாய்களுக்கென தனி,தொலைக்காட்சி சனல் துவக்கப்பட உள்ளது. மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் செல்லப் பிராணிகளை மகிழ்ச்சியாக வைத்திருக்க, பெரிதும் விரும்புவர். அவற்றுக்கென தனி உணவு, இருப்பிடம், குளிர்கால உடை என, நாய்களின் வளர்ப்பில் அதிக அக்கறை காட்டுகின்றனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், ‘டாக் டிவி’ என்ற சனல், அப்பகுதி நாய்களுக்கு மத்தியில், ஏற்கனவே பிரபலம். தற்போது அந்த சேனல், இஸ்ரேல் நாட்டிலும் துவக்கப்பட உள்ளது.

இது குறித்து, ‘டாக் டிவி’ சனலின் தலைமை நிர்வாக அதிகாரி, கிலாட் நியுமேன் கூறியதாவது: எஜமானர்கள், வேலை செய்ய வெளியில் செல்லும் சமயங்களில், வீட்டில் தனித்து விடப்படும் நாய்கள் சோர்ந்து விடுகின்றன. அவற்றை உற்சாகப்படுத்த, இந்த சனல் துவக்கப்பட்டது.

‘அனிமல் பிளானட்’ போன்ற சனல்கள், விலங்குகள் கொல்லப்படுவது உள்ளிட்ட, வன்முறை காட்சிகளை ஒளிபரப்புகின்றன. இவற்றை காணும் நாய்கள், பயந்து விடுகின்றன. மேலும், நிகழ்ச்சிகளின் இடையே அதிக சத்தத்துடன் ஒளிபரப்பாகும் விளம்பரங்கள், நாய்களுக்கு எரிச்சலூட்டுகின்றன.

எங்கள் நிகழ்ச்சிகள், மென்மையான இசையும், நாய்களுக்கு உறுத்தாத நிறங்களும் கொண்டவை. இவற்றை காணும் நாய்கள், நாள் முழுவதும் உற்சாகத்துடன் இருக்கும். ஒவ்வொரு நிகழ்ச்சியும், ஆறு நிமிடங்கள் கொண்டது.

அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சனல், நாய்களும், அவற்றை விரும்புவர்களும் கண்டுகளிக்க ஏற்றது. அமெரிக்காவில் வெற்றி பெற்றதையடுத்து, இது இஸ்ரேலிலும், அறிமுகப்படுத்தப்படுகிறது. இவ்வாறு நியுமேன் கூறினார்.