யாங்கூன்: மியான்மரில், தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவராக, அவுங் சாங் சூச்சி, மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மியான்மர் நாட்டில், பல ஆண்டுகளாக இராணுவ ஆட்சி நடக்கிறது. அந்நாட்டின் ஜனநாயக தலைவரான அவுங் சாங் சூச்சி, 90ம் ஆண்டு நடந்த ஜனநாயக தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். ஆனால், அவரை ஆட்சியில் அமர விடாமல் இராணுவ ஆட்சியாளர்கள் வீட்டு சிறையில் அடைத்தனர். அமெரிக்காவின் அழுத்தத்தில் அவரை மியன்மார் இராணுவ அரசாங்கம் விடுதலை செய்தது.
ஜனநாயகத்துக்காக போராடிய இவருக்கு, சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மியான்மரின் தற்போது ஜனநாயக நடைமுறைகள் தலைகாட்ட ஆரம்பித்துள்ளன. கடந்த ஆண்டு நடந்த இடைத் தேர்தலில், அவுங் சாங் சூச்சி, எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார்.
மியான்மரின் நாட்டின் முக்கிய எதிர்கட்சியான, தேசிய ஜனநாயக லீக் கட்சியின் மாநாடு, யாங்கூனில் நடக்கிறது. இந்த மாநாட்டில், அவுங் சாங் சூச்சி மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இக்கட்சியின், 120 உயர்மட்ட உறுப்பினர்கள், அவுங் சாங் சூச்சியை ஒரு மனதாக, தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த தேர்தலை பார்வையிட, ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் கட்சி அலுவலகம் முன், திரண்டனர். அவர்கள் அனைவரும், அவுங் சாங் சூச்சிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது சூச்சி குறிப்பிடுகையில், “இதே ஆதரவை தேர்தலின் போது, மக்களும் அளிப்பார்கள் என்று நம்புகிறேன். எதிர்வரும் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றி நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்” என்றார்.