‘நான் அதற்குள் செத்துப்போவதை அல்டான்துன்யா விரும்பவில்லை’

1balaபாலாவுடன் நேர்காணல்

இறையருள்தான் தம்மைக் காப்பாற்றியதாக நம்புகிறார் முன்னாள் தனியார் துப்பறிவாளரான பி.பாலசுப்ரமணியம் என்ற பாலா. பாலா, 53, இரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு மார்ச் 3-இல், சிலாங்கூரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார்.

இந்தியாவிலிருந்து திரும்பி வந்த தாம் இரத்தக்குழாய் அடைப்பால் மாரடைப்பு ஏற்பட்டு எந்த நேரத்திலும் செத்திருக்கலாம். ஆனால், இறையருள்தான் தம்மைக் காப்பாற்றியது என்று திடமாக நம்புகிறார். தம் போராட்டத்தைத் தொடர வேண்டும் என கொலையுண்ட மங்கோலிய பெண்ணின் ஆவியும் விரும்புகிறது என்றவர் நினைக்கிறார்.

“ஆண்டுதோறும் அக்டோபர் 19-இல் அவருக்காக பிரார்த்தனை செய்கிறேன். என்றாவது ஒரு நாள் அவருக்கு நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்”.  திங்கள்கிழமை மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் பாலா இவ்வாறு குறிப்பிட்டார்.

1bala1கொலையுண்ட மங்கோலிய பெண்ணுக்காக மட்டுமல்லாமல் குற்றச்செயல்களுக்குப் “பலிகடா” ஆக்கப்பட்டவர்களுக்கும் சேர்த்தே போராடுவதாக பாலா கூறினார்.

கடந்த சில வாரங்களாக பல இடங்களுக்குச் சென்று செராமாக்களில் கலந்துகொண்டார் பாலா. அவர் கலந்துகொண்ட நிகழ்வுகளில் எப்போதும் அரங்கம் நிறைந்த கூட்டம்தான். கூட்டங்களில் தாம் செய்த இரண்டு சத்திய பிரமாணங்கள் (எஸ்டி) பற்றியும், மங்கோலிய பெண் அல்டான்துன்யா ஷரீபு கொல்லப்பட்டதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் பிரதமருக்கு நெருக்கமானவர்களுக்கும் உள்ள தொடர்பு பற்றியும் அது மூடிமறைக்கப்பட்ட விதம் பற்றியும் அவர் எடுத்துரைத்து வந்தார்.

கோத்தா பாருவிலும் கோலாலும்பூரிலும் இரண்டு நிகழ்வுகளில் பேசிவிட்டுத் திரும்பியவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. சோதித்துப் பார்த்ததில் இரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. அதைக் குணப்படுத்த அவர்  வரும் வாரங்களில்  ‘பைபாஸ்’ அறுவைசிகிச்சை செய்துகொள்ள வேண்டியிருக்கலாம்.

“அல்டான்துன்யாவுக்கு மட்டுமல்ல, யுடிகே (Unit Tindakan Khas, சிறப்பு நடவடிக்கை பிரிவு)-ஐச் சேர்ந்த இருவருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன்”.  பாலா,ஒரு காலத்தில் போலீசில் சிறப்புப் பிரிவில் பணிபுரிந்தவர்.

1bala2போலீசில் யுடிகே என்பது உயர்வாக போற்றப்படும் ஒரு பிரிவு. அப்பிரிவைச் சேர்ந்த இரு அதிகாரிகள்மீது அல்டான்துயாவைக் கொலைசெய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை முடிந்து அவர்களுக்குத் தூக்குத்தண்டனை அளித்து தீர்ப்பும் கூறப்பட்டுவிட்டது. தீர்ப்பை எதிர்த்து அவ்விருவரும் மேல்முறையீடு செய்துள்ளனர்.

“அப்பாவிகளான இரு போலீஸ்காரர்களைத் தூக்குமேடைக்கு அனுப்பி வைக்கக்கூடாது. அரசாங்கத்தை மாற்ற வேண்டும். மாற்றினால் வழக்கை மறுபடியும் நடத்தலாம்.

“அப்போது தெரியும் யார் குற்றவாளி என்பது. அரசாங்கத்தை மாற்றவில்லை என்றால் உண்மை தெரியாமலேயே போய்விடும்”, என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

மேலிடத்துடன் அணுக்கமான தொடர்புகளை வைத்துள்ள கம்பள வியாபாரியான தீபக் ஜெய்கிஷன் – பாலா இரண்டாவது எஸ்டி செய்வதற்குக் காரணமாக இருந்தவர்- தொடர்பு கொண்டாரா என்று வினவியதற்கு இல்லை என்றார்.

தீபக்கும், மங்கோலிய மொழிபெயர்ப்பாளரின் கொலையில் நஜிப்புக்கும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் தொடர்புண்டு என்று கூறி அவ்விவகாரத்தை மூடிமறைத்ததில் தமக்கும் பங்குண்டு என்று அறிக்கை விடுத்திருந்தார்.

‘2009-க்குப் பிறகு மாறிவிட்டேன்’

1baladeepkதீபக்கும் தாமும் தனித்தனி வழியில் செல்வதே நல்லது என்று நினைக்கிறார் பாலா.

“நான் சொல்லிவருவதைத்தான் அவரும் சொல்கிறார். ஆனால், 2009-க்குப் பிறகு நான் மாறிவிட்டேன். ஆனால், தீபக் (வலம்) நிலைமை தனக்கு (தன் தொழிலுக்கு)ச் சாதகமாக இல்லை என்ற நிலையில்தான் மாறினார்.

“2009-இல் நஜிப் துணைப் பிரதமரானபோதே நான் மாறிவிட்டேன்.

“ஆனால் தீபக், நிலைமை சாதகமாக இல்லை என்று தெரிந்த பின்னர்தான் சத்தம் போடுகிறார். நான் 2009-இலிருந்து இன்றுவரை அப்படியேதான் இருக்கிறேன். என் அறிக்கைகளும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளன”, என்று பாலா வலியுறுத்தினார்.

சிலாங்கூர் அம்னோவின் முக்கிய புள்ளிகளில் ஒருவரால் நிலக் கொள்முதலில் ஏமாற்றப்பட்ட தீபக், அதன்பின்னரே அல்டான்துயா விவகாரத்தில் தாம் ஆற்றிய பங்கு பற்றி வெளியில் தெரிவிக்க முன்வந்தார் எனத் தெரிகிறது.

இப்போது அவர் அல்டான்துயாவுக்கு நியாயம் கிடைப்பதற்குப் போராடுவதாகக் கூறிக்கொள்கிறார்.

பாலா பக்காத்தானுக்காக பரப்புரை செய்தால்  ரிம700,000 கொடுப்பதாக  மாற்றரசுத் தலைவர் அன்வார் இப்ராகிம் உறுதியளித்திருப்பதாக பேச்சு அடிபடுகிறது. ஆனால் பாலா அதை மறுத்தார்.

“அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இறைவன் பெரியவன். அன்வார் ரிம 700,000 கொடுத்து அதை நான் வாங்கியிருந்தால் இறைவன் என்னைத் தண்டிக்கட்டும்.

“ரிம700,000 பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. எங்கிருந்து தெரிந்துகொண்டார்களோ”.

பாலாவுக்கு எதிராக மலாய் உரிமைகளுக்காக போராடும் என்ஜிஓ-வான பெர்காசா போலீசில் புகார் செய்துள்ளது. ஆனால், அது பற்றி பாலா கவலைப்படவில்லை.

“அவர்கள் சத்தம் போடட்டும்… எனக்குக் கவலை இல்லை. இது ஜனநாயக நாடு, அதனால் சத்தம் போடட்டும்.

“போலீஸ் அழைத்தால் அவர்களுக்குப் பதில் சொல்வேன். அதற்குத் தயாராகவே இருக்கிறேன். எனக்குப் பக்கபலமாக மூன்று வழக்குரைஞர்கள் இருக்கிறார்கள்”, என்றார்.

TAGS: