அன்வார்: பிரதமருடைய வளர்ச்சி ஆரூடங்களுக்கு ஆதாரமில்லை

நஜிப் நிர்வாகம் 2012ம் ஆண்டுக்கான வளர்ச்சி ஆரூடங்களை அளவுக்கு அதிகமாக மதிப்பிட்டுள்ளதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் குற்றம் சாட்டியுள்ளார்.

பல முக்கிய ஆய்வு அமைப்புக்கள் தெரிவித்துள்ள ஆரூடங்களுக்கு மாறாக அவை அமைந்துள்ளன என்றும் அவர் சொன்னார்.

உலகப் பொருளகம், மலேசிய பொருளாதார ஆய்வுக் கழகம், ஆர்எச்பி ஆகிய அமைப்புக்கள் அறிவித்துள்ள மதிப்பீடுகளுக்கு முரணாக 2012க்கு ஐந்து முதல் ஆறு விழுக்காடு வளர்ச்சி ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என அன்வார் குறிப்பிட்டார்.

“நஜிப் நிர்வாக மதிப்பீடுகள் தெளிவாக நிராகரிக்கப்பட வேண்டும். ஏனெனில் அது மிக அதிகமானது. மற்ற அமைப்புக்கள் அதை விடக் குறைவான மதிப்பீடுகளையே தெரிவித்துள்ளன.”

2010ல் அந்நிய நேரடி முதலீடுகள் ஆறு மடங்கு கூடியிருப்பதாக 2012ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளதும் தவறான தகவல் என பெர்மாத்தாங் எம்பி-யுமான அன்வார் குறிப்பிட்டார். ஏனெனில் 2009ம் ஆண்டு அந்நிய நேரடி முதலீடு மிகவும் குறைவாக இருந்தது என்றார் அவர்.

அதற்கு ஆதாரமாக அவர், பைனான்ஷியல் டைம்ஸ் என்ற நாளேட்டின் இவ்வாண்டுக்கான உலக கண்ணோட்ட அறிக்கையை வாசித்தார். அந்நிய நேரடி முதலீடுகளைப் பொறுத்த வரையில் இவ்வட்டாரத்தில் மலேசியாவின் நிலை குறித்து நல்ல மதிப்பீட்டை அது வழங்கியுள்ளதாக அவர் சொன்னார்.

இவ்வட்டாரத்தில் அதிகமான முதலீடுகளைப் பெற்ற நாடுகள் பட்டியலில் மலேசியா இடம் பெறவில்லை என அவர் வாதாடினார். அண்டை நாடுகள் அந்த வகையில் நல்ல அடைவு நிலையைப் பெற்றுள்ளன என்றும் அவர் சொன்னார்.

அன்வார் மக்களவையில் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார்.