சபா கம்போங் தண்டுவோ-வில் ஊடுருவிய ஆயுதமேந்திய சுலு கிளர்ச்சிக்காரர்கள் உண்மையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் தங்கள் தாக்குதலைத் தொடங்கத் திட்டமிட்டிருந்ததாக உத்துசான் மலேசியா இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உள்ளூர் மக்கள் உதவியுடன் தேர்தல் காலத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நாட்டை குழப்பத்தில் ஆழ்த்த அந்த ஊடுருவல்காரர்கள் எண்ணம் கொண்டிருந்தனர் என சில வட்டாரங்களை மேற்கோள் காட்டி அம்னோவுக்குச் சொந்தமான அந்த ஏடு கூறியது.
பாதுகாப்புப் படைகளை நிலைகுலையச் செய்யும் பொருட்டு கட்டம் கட்டமாக ஊடுருவல்காரர்கள் நாட்டுக்குள் நுழைந்தனர் என்றும் அந்த வட்டாரங்கள் கூறிக் கொண்டன.
“அவர்கள் முன்கூட்டியே கண்டு பிடிக்கப்பட்டு அவர்களை முறியடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்.”
வரும் பொதுத் தேர்தலுக்கு இடையூறும் செய்வதற்காக நாட்டை குழப்பத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிடுவதாக கடந்த புதன் கிழமை துணைப் பிரதமர் முஹைடின் யாசின் குற்றம் சாட்டியிருந்தார்.
“நம்பத்தகுந்த ஆவணங்களிலிருந்து” அந்தத் தகவல் பெறப்பட்டதாக முஹைடின் சொன்னார் என பெர்னாமா தெரிவித்தது.
ஆளும் பிஎன் கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருவதால் பக்காத்தான் ராக்யாட் அதிர்ச்சி அடைந்துள்ளதே அதற்குக் காரணம் என்றும் அவர் சொல்லிக் கொண்டார்.