கிட் சியாங் ஜோகூரில் போட்டியிடுவது பற்றி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

1lim

டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் அடிக்கடி ஜோகூர் செல்கிறார் என்றால் அதற்குக் காரணம் இல்லாமலில்லை. அவர் வரும் பொதுத் தேர்தலில் அம்மாநிலத்தில்தான் போட்டியிடுவார் என நம்பப்படுகிறது.

அது பற்றி ஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினரான லிம், திங்கள்கிழமை ஜோகூர் பாருவுக்கு அருகில் ஸ்கூடாயில் டிஏபியின் 47-வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் செய்வார் எனத் தெரிகிறது.

மலேசியாகினி டிஏபி கட்சியினர் பலரிடம் லிம் ஜோகூரில் போட்டியிடும் சாத்தியம் உண்டா என்று விசாரித்தபோது அது “உண்மையிலும் உண்மை” என்றார்கள்.

ஆனால், லிம் தாம் களமிறங்கப்போகும் தொகுதியை அறிவிப்பாரா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள இயலவில்லை. என்றாலும் கேலாங் பாத்தாவில் அவர் போட்டியிடலாம் என்ற ஊகம் பலமாக உள்ளது.

லிம்மைத் தொடர்புகொண்டு அது பற்றி வினவியதற்கு கருத்துரைக்க மறுத்து விட்டார்.

1anthonyகடந்த செவ்வாய்க்கிழமை, டிஏபி தேசிய ஏற்பாட்டுக்குழுச் செயலாளர் அந்தோனி லோக், ஸ்கூடாயில் கட்சியின் ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தில் “முக்கிய அறிவிப்பு” ஒன்று செய்யப்படும் என்றார்.

அது பற்றி மேலதிக விவரங்களைக் கோரியதற்கு லோக் எதுவும் தெரிவிக்க மறுத்தார்.

ஜோகூரில் மூன்று நாடாளுமன்றத் தொகுதிகள் டிஏபி மூத்த தலைவரின் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிகிறது- கேலாங் பாத்தா, கூலாய், குளுவாங். மூன்றில் கேலாங் பாத்தாவில் அவர் களவிறங்கும் வாய்ப்புத்தான் அதிகம் எனக் கருதப்படுகிறது.

ஜோகூர் பாருவுக்கு அருகில் உள்ள அத்தொகுதி 54 விழுக்காடு சீன வாக்காளர்களையும் 34 விழுக்காடு மலாய் வாக்காளர்களையும் 12 விழுக்காடு இந்திய வாக்காளர்களையும் கொண்டது. அத்தொகுதியின் நடப்பு எம்பி ஜோகூர் மசீச மகளிர் தலைவி டான் ஆ எங். அவர், 2008 தேர்தலில் 8,851 வாக்குகள் பெரும்பான்மையில் அத்தொகுதியில் வெற்றி பெற்றார்.

ஆனாலும், அங்குள்ள சீனர்கள் பிஎன்னுக்கு எதிர்ப்பான போக்கைக் கொண்டிருப்பதால் அதனை வெற்றிக்கொள்ள முடியும் என்றே பக்காத்தான் நம்புகிறது.

ஆனால், ஒரு சிக்கல். கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில் அத்தொகுதியில் போட்டியிட்ட கட்சி பிகேஆர். அண்மையில் ஜோகூர் டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவ், தம் கட்சி அங்கு போட்டியிட விரும்புவதாக தெரிவித்ததும் மாநில பிகேஆர் தலைவர் சுவா ஜூய் மெங் எகிறி குதித்தார். இருவரும் ஊடகங்களில் மோதிக்கொண்டனர்.

அதன்பின் இரு கட்சிகளின் மேலிடங்களும் தலையிட்டு பிரச்னை பெரிதாகாமால் தடுத்தன. ஆனால், டிஏபி பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமின் ஆசியுடன் கேலாங் பாத்தாவைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது.

பிகேஆர் அடிநிலை உறுப்பினர்கள் ஒரு வேளை அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கலாம். இவ்வாரத் தொடக்கத்தில் பிகேஆர் அதன் பெந்தோங் தொகுதியை டிஏபி-க்கு விட்டுக் கொடுத்ததுகூட அவர்களுக்குப் பிடிக்கவில்லைதான்.

எனவேதான், டிஏபி தலைவர்களும் அவர்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்கக்கூடாது என்பதற்காக கேலாங் பாத்தா பற்றிப் பேசுவதற்கு மறுக்கிறார்கள் போலும்.

அன்வாரின் ஆசி உதவியாக இருக்கும்

1lim1திங்கள்கிழமை ஆண்டுக் கொண்டாட்டத்தில் அன்வார் கலந்து கொள்வார் என்பதை டிஏபி உறுதிப்படுத்துயுள்ளது.

அன்வார் முன்னிலையில் லிம் கேலாங் பாத்தாவில் போட்டியிடப்போவது பற்றி அறிவித்தால் அது பிகேஆர் கட்சியினர் ஆத்திரம் கொள்வதைத் தணிக்கும் என்று நம்பப்படுகிறது.

இதன் தொடர்பில் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியைத் தொடர்புகொண்டு தகவல் பெறலாம் என்று பார்த்தால் அவரையும் தொடர்புகொள்ள முடியவில்லை.

 

 

 

TAGS: