2000 ஏக்கர் நிலம் யார் பெயரில் பதிவாகப் போகிறது?

kulaஎம். குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், மார்ச் 15, 2013.

கடந்த  வாரம் பேரா மாநில  மந்திரி புசார் ஜம்ரி  2 ஆயிரம் ஏக்கர் நிலம் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்திற்கு ஒப்படைக்கப் பட்டுவிட்டதாகவும் , ஒரு புதிய அறவாரியத்தை அமைத்து, அதன் உறுப்பினர்கள் அந்த நிலத்தை  மேம்படுத்தி அதில் கிடைக்கும் வருமானம் தமிழ்ப்பள்ளிகளுக்கும், இந்திய மாணவர்களுக்கும் போய்ச் சேருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

அதன் முக்கிய கூறுகள்:

  1. தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் அந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மேம்படுத்தும்;
  2. புதிதாக பேரா மாநில இந்திய மாணவர்கள் கல்வி மேம்பாட்டு அறவாரியம் என்று ஒன்று அமைக்கப்படும்;
  3. தேநிகூ சங்கம் செலவு போக மீத முள்ள பணத்தை இந்த புதிய வாரியத்திடம் ஒப்படைக்கும்;
  4. புதிய உறுப்பினர்கள் யார் யார் என்ப தை மந்திரி புசார், பிரதமர் ஒப்புதல்  அளித்த பின்னர் வெளியிடுவார்.

இந்த அறிவிப்பை செய்தவுடன் மந்திரி புசார், இந்த சர்ச்சைக்கு ஏதோ முடிவு வந்தது போல, இனி எதிர்க் கட்சிகள் இந்த நில விவகாரம் குறித்த பேசுவதற்கு ஒன்றுமில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பு எந்த ஒரு தீர்வையும் கண்டு விடவில்லை என்பதுதான்  உண்மை !

எதைச் செய்யக்கூடாது என்று நான் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தி வந்தேனோ அதைத்தான் இந்த மந்திரி புசார் செய்துவிட்டு மார்தட்டிக்கொள்கிறார்.

முறையாகப் பார்க்கப் போனால், அந்த நிலம் ஓர் அறவாரியத்தின் பேரில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் . அதன் பின்னரே அந்த அறவாரியம் ஒரு நில மேம்பாட்டாளரை  அடையாளம் கண்டு ஒப்பந்தம் செய்திருக்கவேண்டும் . நிலத்தை பயிரிட அனுமதி கொடுத்து விட்டு வாரியம் அமைப்பது என்பது வீட்டில் ஒருவரை குடிவைத்து விட்டு வாடகை பேசுவதற்கு சமம். இது புத்திசாலித்தனமில்லாத ஏமாளித்தனம். இதிலிருந்தே தெரிகிறது வீரசிங்கம் மற்றும் கணேசன் ஆகியோரின்  அதிமேதாவித்தனமும் அவர்கள் மந்திரி புசாருக்கு வழங்கும் ஆலோசனைகளின் தரமும்!.

இந்த அறிவிப்பு மேலும் பல குழப்பங்களுக்குக்கும், கேள்விகளுக்கும் வித்திடுகிக்கின்றது என்றால் அது மிகையாகாது. மேலும் கேள்விகள்:

  1. இந்த நிலம் தே.நி.கூ. சங்கத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளதா ? அல்லது வெறும் பேச்சுவார்த்தையோடு உள்ளதா ?
  2. அப்படி அந்த நிலம் உண்மையில் கொடுக்கப்பட்டிருந்தால் , அந்நிலத்தைப் பிரதிநிதித்து யார் கையொப்பமிட்டது ?
  3.  அப்படி வெறும் பேச்சுவார்த்தையோடு மட்டும்  இருந்தால், ஏன் இந்த அவசர அறிவிப்பு ? இதில் உள்ள உள்நோக்கமென்ன?
  4. இருக்கின்ற அறவாரியங்கள் சிறப்பாக செயல்படவில்லை என்ற காரணத்தினால் அவற்றிற்கு இந்த நிலம் ஒப்படைக்கப்படாத பட்சத்தில், புதியதொரு அறவாரியத்தை அமைத்த பிறகல்லவா மேம்பாட்டாளரை அடையாளம் கண்டிருக்க வேண்டும். முதலில் மேம்பட்டாளர், பிறகு அறவாரியம் என்கின்ற முரண்பாடு ஏன் ?
  5. நில மேம்பாட்டாளர் அடையாளம் கண்ட பின்னர் , இந்த புதிய அறவாரியம் எந்த பலத்தைக் கொண்டு அந்த மேம்பாட்டாளரிடம் பேசி அதிக லாபம் கிடைக்கக்கூடிய வகையில் ஒப்பந்தத்தை வரையருப்பது ?
  6. தமிழ்ப் பள்ளிகளுக்கென்று ஆரம்ப முதலே கூறி வந்த மந்திரி புசார் இப்பொழுது ஏன் எல்லா இந்திய மாணவர்களும் இந்த வருமானத்திலிருந்தும் பயன்பெறுவார்கள்   என்று கூறுகிறார் ?

இப்படி பல குழப்பங்களுக்கு வழிவகுக்கும் இந்த அறிவிப்பானது பேரா இந்தியர்களை திருப்திப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு அவர்களை ஏமாற்றுவதாகவே அமைந்துள்ளது.

இதில் எதோ வில்லங்கம் இருப்பது போன்று தெரிகிறது .

முதலில் ஏன் இந்த தமிழ்ப் பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலம் சீன பள்ளிகளைப் போல பள்ளிகளைச் சார்ந்த அறவாரியத்தினிடம் ஒப்படைக்கப்படவில்லை ? அப்படி ஒப்படைத்திருந்த்தால், தமிழ்ப்பள்ளிகளுக்கு அது ஒரு நிரந்தர சொத்தாக இருந்திருக்குமல்லவா ? இதுவரையில் அந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலம் யார் பெயரில் பதிவாகப் போகிறது என்ற எனது கேள்விக்கு மந்திரி புசார் தீர்க்கமான பதிலைக் கூறவில்லை . எதற்காக இந்த மூடு மந்திரம் ?

இந்த நிலம், அறவாரியம் – மேம்பாட்டாளர் என்ற இரு சாராரின் விவாதத்திற்குப் பிறகு  ஓர் ஒப்பந்தத்தின் பேரில் மேம்பாடு கண்டால் வர்த்தக ரீதியாக எற்றுக்கொள்ளக்கூடியதாகவும், பின்னால் எந்த ஒரு குழப்பத்திற்கும் வழி வகுக்காமலும் இருந்திருக்கும். அதை விடுத்து, யாயாசன் பெராக் (மந்திரி புசார்) – மேம்பாட்டாளர் – அறவாரியம் என்ற முக்கோணவடிவில் இந்த நிலம் மேம்படுத்தப் படுமேயானால் இதில் பல குளறுபடிகள் ஏற்படவாய்ப்புண்டு .

நிலத்தின் மேம்பாட்டு செலவு போக மீதமுள்ளதைத்தான் அறவாரியத்திடம் ஒப்படைப்பேன் என்று  சோமசுந்தரம் கூறியிருப்பது அவர் இயக்குனராக இருக்கும்  கூட்டுறவுச் சங்கத்திற்கு  நட்டம் வராமல் பார்த்துக்கொள்ளும் அவரின்  வியாபார விவேகத்தை வெளிப்படுத்துகிறது. அதே சமயம் எவ்வளவு செலவு என்பதனை ஒருதலை பட்சமாக தீர்மானிக்கும் உரிமையும் அவருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பது இந்த அறிக்கை மூலம் தெளிவாகிறது. புதிதாக  அமைக்கப்படவிருக்கும் அறவாரியத்திற்கு அந்த உரிமை கிடைக்க வாய்ப்பில்லை. இதை எத்தனை பேர் உணர்ந்திருக்கின்றார்கள் ?

ஒரு வியாபர ஒப்பந்தம் என்றால் அதன் சாராம்சம்கள் சம்பந்தப்பட்ட இரு சாரருக்கும் ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில்தான் கையொப்பமாகும். தே.நி.கூ. சங்கத்திற்கு இந்த நிலம் கொடுக்கப்பட்டது  என்ற அறிவிப்பினாலும் , வேறு ஒரு நிறுவனம் இதனை மேம்படுத்த முடியாத நிலையினாலும், எப்படி இந்த புதிய அறவாரியம் தனக்கு வேண்டிய அனுகூலங்களை விவாதித்து பெறமுடியும் ?

இந்த மந்திரி புசார் ஒரு விவேகமுள்ள முதல்வராக இருந்திருந்தால் , முதலில் ஒரு  வாரியத்தை அமைத்துவிட்டு பின்பு அந்த வாரியத்துடன் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தை கலந்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்திருக்க வேண்டும் . அதைவிடுத்து முன்னுக்குப் பின்னாக  முரண்பாடகச் செயல்பட்டு அமையவிருக்கும் அறவாரியத்தை ஒரு தர்மசடங்கான நிலைக்கு இட்டுச் சென்றுவிட்டார்

இதிலிருந்து தெரிகின்றதல்லவா பேரா மந்திரி புசாரின் தமிழ்ப் பள்ளிகளுக்கெதிராக செயல்படும்  நேர்மையற்ற தன்மை ?

இதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் அவர்களின் ஆலோசகர்களாக  வீற்றிருக்கும் வீரசிங்கம் மற்றும்  கணேசன் ஆகிய இருவர் மட்டுமே ?

சரியான ஆலோசனையை சரியான தருணத்தில் வழங்காத இந்த இருவரும் இனியும் இந்தியர்கள் நலனை பேரா மாநிலத்தில்  பிரதிநிதிப்பதாக கூறிக்கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

TAGS: