பிடிபிடிஎன் என்ற தேசிய உயர் கல்வி நிதியை கூடிய விரைவிலோ அல்லது பின்னரோ நிறுத்த வேண்டும் இல்லை என்றால் அது நாட்டை நொடித்துப் போகச் செய்து விடும் என பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கூறுகிறார்.
ஊழியர் சேம நிதி வாரியம் (இபிஎப்), Permodalan Nasional Berhad (PNB)போன்ற நிதி நிறுவனங்களிடமிருந்து 45 பில்லியன் ரிங்கிட்டை பிடிபிடிஎன் இதுவரை கடன் வாங்கியுள்ளது. அதில் 30 பில்லியன் ரிங்கிட் உயர் கல்விக் கடன்களுக்காக விநியோகம் செய்யப்பட்டுள்ளது என அவர் சொன்னார்.
ஆண்டுக்கு 11 விழுக்காடு விகிதம் அதிகரித்து வரும் கடன் அளவு 2022ல் 100 பில்லியன் ரிங்கிட்டை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
“அந்த நிலை ஏற்பட்டால் நமது நிதி முறையை அது பாதிக்கும். அடுத்து என்ன நடக்கும் ? நாம் பிடிபிடிஎன்-னைக் காப்பாற்ற வேண்டும்,” என அவர் நேற்று சொன்னார்.
100 பில்லியன் ரிங்கிட் கடன் சுமையை எதிர்நோக்குவதற்குப் பதில் அந்த நிதியை இப்போது ரத்துச் செய்து விட்டு 30 பில்லியன் ரிங்கிட் கடனை அடுத்த 20 ஆண்டுகளுக்கு மறு நிதியாக மாற்றலாம் என அவர் வாதாடினார்.
1997ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட பின்னர் பிடிபிடிஎன் இது வரையில் 2 மில்லியன் ரிங்கிட் கடனை மட்டுமே திரும்பப் பெற முடிந்துள்ளது. அமெரிக்காவிலும் இதே சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட ராபிஸி,
கடந்த ஆண்டு இறுதி வரையில் அதன் மாணவர் கடன்கள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலரை (3.12 டிரில்லியன் ரிங்கிட்) எட்டியது.
“அதனால் அந்தக் கடன்களை மன்னித்து விடுவதற்கு புதிய சட்டத்தை அமெரிக்க மேலவையும் மக்களவையும் தயாரித்துக் கொண்டிருக்கின்றன. பிடிபிடிஎன்-னை ரத்துச் செய்ய வேண்டும் என்ற எங்களுடைய எண்ணத்தை பின்பற்ற அமெரிக்கா விரும்புவது காரணமல்ல.”
வீட்டுக் கடன்கள், கடன் பற்று அட்டைகள் ஆகியவற்றுக்கு அடுத்த நிலையில் நிதி நிலைத்தன்மைக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது மாணவர் கடன்கள் என்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளதே அதற்குக் காரணமாகும்.”
“அந்தக் கடனை திருப்பிச் செலுத்தா விட்டால் 2008ம் ஆண்டு நிகழ்ந்த சொத்து விலை வீழ்ச்சியைப் போன்ற நிலை ஏற்படும்,” என்றார் ராபிஸி.
சிலாங்கூர் பண்டார் உத்தாமாவில் அன்வார் இப்ராஹிமும் 200 இளைஞர்களும் கலந்து கொண்ட கலந்துரையாடலில் ராபிஸி பேசினார்.