சான் பிரான்சிஸ்கோ: பிரபல ‘கூகுள்’ இணையதள நிறுவனத்தின், ‘ஆண்ட்ராய்டு’ பிரிவின் தலைவராக, இந்திய வம்சாவளி தமிழரான சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஸ்மார்ட் போன்கள் மற்றும் சிறிய வகை மடிக்கணினிகளை பயன்படுத்த உதவும் ஆபரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்டு, 2008ல் கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. தற்போது, உலகில் உள்ள ஸ்மார்ட் போன்களில், மூன்றில் ஒரு பங்கு போன்கள், ஆண்ட்ராய்டு மூலம் இயங்குகின்றன.
இலவச மென்பொருளான ஆண்ட்ராய்டு, முன்னணி கைப்பேசி நிறுவனங்களான சாம்சங், ஹெச்.டி.சி., உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படுகிறது. இதன் தலைவராக இருந்த ஆண்டி ரூபினுக்கு பதிலாக, சுந்தர் பிச்சை (வயது 41) நியமிக்கப்படுவதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, லாரி பேஜ் அறிவித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, காரக்பூரில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் பி.டெக்., படித்தவர். அமெரிக்காவின், ‘ஸ்டேன்போர்டு’ பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்ற இவர், ‘வார்ட்டன் பிசினஸ்’ கல்லூரியில் எம்.பி.ஏ., பட்டமும் பெற்றுள்ளார். கடந்த, 2004ல், கூகுள் நிறுவனத்தில் இணைந்த இவர், ‘கூகுள் குரோம் இன்டர்நெட் பிரவுசர்’ பிரிவின் தலைவராக பணிபுரிந்தவர்.