சிலாங்கூர் மாநில மந்திரி புசார் அப்துல் காலிட் தலைமையில் ஷா ஆலாம் ஜூப்ளி பேராக் மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு பெரும் நிகழ்வொன்றில் சிலாங்கூர் மாநில பாக்கத்தான் ராக்யாட் அரசு மாநிலத்திலுள்ள 84 தமிழ்ப்பள்ளிகளுக்கு மொத்தம் 26 இலட்சத்து 65 ஆயிரம் ரிங்கிட்டை மானியமாக வழங்கியது.
முதல் கட்ட மானியமாக சுமார் 10 இலட்சம் வெள்ளி தைப்பூசத்தின் போது பத்துமலையிலும் இப்பொழுது 2ஆம் கட்டமாக மானியத் தொகையை 15-3-2013 இல் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் அடிப்படைத் தேவையைக் கருத்தில் கொண்டு 5,000 முதல் 85,000 ரிங்கிட் வரை சம்பந்தப்பட்டப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன. தலா 85,000 ரிங்கிட்டைப் பெற்ற ஒன்பது தமிழ்ப்பள்ளிகள் கணினி மையங்களை அமைப்பதற்கு அந்த நிதியைப் பயன்படுத்தும்.
மாநில அரசு கடந்த ஆண்டுக்கு நாற்பது லட்சம் வெள்ளி வீதம் கடந்த ஐந்தாண்டுகளில் இரண்டு கோடி ரிங்கிட்டை சிலாங்கூரிலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கியுள்ளதாக டாக்டர் சேவியர் கூறினார்.
41 பள்ளிகளில் கணினி மையங்களை அமைப்பதற்கு இதுவரை 34 இலட்சம் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது. இவ்விசயத்தில் அரசியல் பாகுபாடு காட்டக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். பல தமிழ்ப்பள்ளிகளில் பாரிசான் செலவு செய்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
கல்வி உறுப்புக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களாக இருந்த போதிலும் அவர்களுக்கும் மானியம் வழங்கி வருகிறோம். எனினும், சில பள்ளிகள் மாநில அரசு வழங்கும் மானியத்தையும் கணினி மையத்தையும் ஏற்க மறுப்பது வருத்தமளிப்பதாக உள்ளது. சில தலைமையாசிரியர்களின் இத்தகையப் போக்கினால் சம்பந்தப்பட்டப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் எதிர்காலம்தான் பாதிக்கப்படுகிறது என்று டாக்டர் சேவியர் தெரிவித்தார்.
வரும் பொதுத்தேர்தலில் பாக்கத்தான் மீண்டும் வெற்றி பெற்றால் தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியத் தொகை நாற்பது இலட்சத்திலிருந்து அறுபது இலட்சம் ரிங்கிட்டாக உயர்த்தப்படும் எனக் கூறிய அவர், பள்ளிகளில் கணினி மையம் தவிர்த்து அறிவியல் கூடங்கள் மற்றும் வாழ்வியல் திறன் மையங்களை அமைப்பதிலும் தீவிரம் காட்டப்படும் என்றார்.
நகர்ப்புறங்களில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் தோட்டப்புறப் பள்ளிகளை நகரையொட்டிய பகுதிகளுக்கு இடமாற்றம செய்வது குறித்து சைம் டார்பி உள்ளிட்ட தோட்ட நிர்வாகங்களுடன் மாநில அரச பேச்சு நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாநில அரசு வழங்கும் பணத்தை வாங்க மறுக்கும் பள்ளிகளை பெயர் குறிப்பிடவேண்டும். ஜெயக்குமார் பொதுவாக சொல்லக்கூடாது.அரசு வழங்கும் பணம் மக்களின் வரிப்பணம்.அதைப் பெற்றுக்கொள்ளமாட்டோம் என்று சொல்வதற்கு எந்த அதிகாரமும் இல்லை. பெற்றோர் ஆசிரியர் சங்கமாக இருந்தாலும்,பள்ளி நிருவாகமாக இருந்தாலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியை ஒதுக்கிக்கொள்ளவேண்டும்.இல்லைஎன்றால் மக்கள் அவர்களுக்கெதிராக கிளர்ந்தெழுவார்கள்.