உருமாற்றம் மீதான அரசாங்கத்தின் அறிக்கையில் ஏழ்மைநிலையை 1.7விழுக்காட்டுக்குக் குறைத்திருப்பதாக சொல்லிப் பிரதமர் ஏமாற்றுகிறார் என பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் சாடியுள்ளார்.
அவ்வாறு சொல்லப்பட்டிருப்பதை “நம்ப முடியாத, அடிப்படையற்ற ,அப்பட்டமான மோசடி” என்று வருணித்த சுரேந்திரன் (வலம்) மலேசியாவில் வறுமை விகிதம் உண்மையில் 19 விழுக்காடு என்றார்.
“நஜிப் 1.7விழுக்காடு என்று முன்வைக்கும் சிறிய புள்ளிக்கணக்கு நாடு முழுக்க நகர்புறத்திலும் கிராமப்புறத்திலும் பரவலாகக் காணப்படும் வறுமைநிலைக்கு முரணாக உள்ளது.
“விலைவாசி உயர்வையும் சம்பளம் தேங்கிக் கிடப்பதையும் பார்க்கையில் நஜிப் சொல்வது கணக்குக்கோ அறிவுக்கோ பொருந்தி வரவில்லை. அவரது கூற்று சுற்றிலும் கண்ணுக்குத் தெரிகின்ற அளவுகடந்த வறுமை நிலைக்கு எதிராக உள்ளது”, என சுரேந்திரன் அறிக்கை ஒன்றில் கூறினார்.
நேற்றிரவு தாக்கல் செய்த உருமாற்றத் திட்டம் மீதான ஆண்டறிக்கையில் பிரதமர் கூறியதற்கு எதிர்வினையாற்றியபோது சுரேந்திரன் இவ்வாறு உரைத்தார்.
பிகேஆரின் புள்ளிவிவரம் சரியானது என்று குறிப்பிட்ட அவர், அது புள்ளிவிவரத் துறையின் 2009 வீட்டு வருமானம், அடிப்படை வசதிகள் மீதான ஆய்வறிக்கையை அடிப்படையாகக்கொண்டது என்றவர் சொன்னார்.